காங்கிரசுக்கு பாடம் புகட்ட ஜெய் பஜ்ரங்பாலி என்று சொல்லி தேர்தலில் வாக்களியுங்கள்: பிரதமர் மோடி அழைப்பு

அங்கோலா: கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு பாடம் புகட்ட வாக்களிக்கும் போது ஜெய் பஜ்ரங்பாலி என்று கூறி வாக்களியுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.கர்நாடக மாநிலம் அங்கோலாவில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, ‘கர்நாடக கலாச்சாரம் பண்பாட்டை காங்கிரஸ் அவமதித்துள்ளது.

அவர்களுக்கு பாடம் புகட்ட கர்நாடக மக்கள் ஜெய் பஜ்ரங்பாலி என்று சொல்லி வாக்களியுங்கள். நான் காங்கிரசின் ஊழல் முறையை நசுக்குகிறேன். அதனால் காங்கிரஸ் தலைவர்கள் என்மீது வெறுப்பையும், அவதூறையும் பரப்புகிறார்கள். கர்நாடகாவில் யாராவது அவதூறு கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வார்களா?

இந்த முறை மக்கள் என்ன செய்ய வேண்டும். காங்கிரசை தண்டிக்க வேண்டும். எப்படி தண்டிப்பீர்கள். வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள். வாக்கு இயந்திர பட்டனை அழுத்தும் போது ஜெய் பஜ்ரங்பாலி என்று சொல்லி தண்டியுங்கள். பாரத் மாதாகி ஜெய். வந்தே மாதரம்,ஜெய் பஜ்ரங்பாலி என்று என்னுடன் உரக்க சொல்லுங்கள்’ என்றார்.

இதற்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரனதீப் சுர்ஜிவாலா, ‘சட்டப்படி தனி நபரோ, அமைப்போ வெறுப்பையும், பகையையும் பரப்பபினால் அதை தடை செய்ய முடியும். அதை தான் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

ஆனால் காங்கிரஸ் அனுமனுக்கு எதிரான கட்சி என்பது போன்று பாஜ தூண்டிவிடுகிறார்கள். ராஜ தர்மத்தை பிரதமரும், முதல்வரும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. காங்கிரசை அவமதிக்கும் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post காங்கிரசுக்கு பாடம் புகட்ட ஜெய் பஜ்ரங்பாலி என்று சொல்லி தேர்தலில் வாக்களியுங்கள்: பிரதமர் மோடி அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: