சென்னை: ‘தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், 7 அல்லது 8ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும்’ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி 29ம் தேதி வரை நீடிக்கும். அந்த நாட்களில் வெயில் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று இணையும் பகுதி நீடிக்கிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 60 இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 190 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேலத்தில் 170 மிமீ பதிவாகியுள்ளது.
சென்னை, கோவை, நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்துள்ளது. அதேபோல, மதுரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, சேலம், வேலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்துள்ளது.
அத்துடன் நீலகிரி, ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் இடி மின்னலுடன் கூடிய மழையும், மணிக்கு 30 கிமீ வேகம் முதல் 40 கிமீ வரை பலத்த காற்றும் வீசியது. அதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மேலும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளது. இதையடுத்து, இதே நிலை அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், நீலகிரி முதல் தேனி வரையிலான பகுதிகள் சேலம், கரூர், மதுரை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பும் உள்ளது.
இந்நிலையில், தென் மேற்குவங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், குமரிக் கடல், மன்னார் வளைகுடாப் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு-மாலத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிமீ வேகம் முதல் வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், வங்கக் கடலில் காற்றின் ஈரப்பதத்தின் அளவு கூடியுள்ள நிலையில் ஈரப்பதத்தின் குவிவும் அதிகரித்துள்ளது. அதனால், தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மே மாதம் 6ம் ேததி தென் கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதன் தொடர்ச்சியாக 7 மற்றும் 8ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும்.இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தென்கிழக்கு வங்கக்கடலில் 7, 8ம் தேதியில் காற்றழுத்தம்: தமிழகத்தில் மழை நீடிக்கும் appeared first on Dinakaran.
