பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனம் மந்தகதியில் நடக்கும் அரசலாறு தடுப்பணை மேம்பாட்டு பணிகள்-விரைந்து முடிக்க பாசன விவசாயிகள் கோரிக்கை

காரைக்கால் : காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அகலங்கண்ணு கிராமத்தில் புதுச்சேரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தடுப்பணை உள்ளது. கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீர், நல்லம்பல் ஏரியில் தேக்கப்பட்டு பின் அகலங்கண்ணு அரசலாற்றின் தடுப்பணையில் இருந்து பல இடங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனிடையே இந்த தடுப்பணை கட்டி பல வருடங்கள் ஆகியதால் கான்கிரீட் தளம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டதால் அணையின் உறுதி தன்மை கேள்விக்குறியானது. இதனை கருத்தில் கொண்டு நபார்டு வங்கி நிதியுதவியில் தடுப்பணையின் குறுக்கு சுவர், கான்கிரீட் தளம் மற்றும் கான்கிரீட் தடுப்பு கட்டை அமைக்கும் பணிகள் மற்றும் அகலங்கண்ணு கிராமத்தில் இருந்து செட்டிக்கோட்டம் சிற்றேரி வரையிலான இணைப்பு சாலையை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த ஆண்டு ரூ.4.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகளுக்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து பாசன விவசாயிகள் கூறியதாவது:காரைக்கால் மாவட்டத்தில் நான்கில் இரண்டு பங்கு முப்போகம் விளையக்கூடிய பகுதி என்றால் அது சேத்தூர், அகலங்கண்ணு, மாணம்பேட்டை மற்றும் காரைக்கால் வடமேற்கு பகுதியாகும். இங்கு சுமார் 2,000 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளுக்கு இருக்கும் ஒரே பாசன ஆறு அரசலாறு மட்டுமே.

காவிரியில் திறந்து விடப்படும் நீரானது கல்லணையில் இருந்து காரைக்கால் மாவட்டத்தில் அதிக அளவு நீரை தேக்கி வைக்கும் இரண்டு தடுப்பணைகளில் பிரதானமாக இருப்பது அகலங்கண்ணு தடுப்பணை ஆகும். மேலும் இந்த தடுப்பணை மூலம் உறிஞ்சப்படும் நீர் தான் காரைக்கால் நகர பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

அகலங்கண்ணு தடுப்பணையில் புதிய தரம் வாய்ந்த தளம் அமைக்க கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் ஓராண்டு ஆகியும் மிக முக்கிய பணிகள் கூட தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது 50 சதவீதம் சேதமடைந்த கான்கிரீட் தரை தளம் மட்டுமே அப்புறப்படுத்தி, குறிப்பிட்ட பகுதியில் புதிய தளம் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பணையில் கான்கிரீட் தடுப்பு கட்டை ஆகியவை அமைக்கப்படாமல் உள்ளது.

மேம்பாட்டு பணிகளுக்கு முழு நிதி ஒதுக்கிய பிறகும், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர்களின் பணியிட மாற்றம் மற்றும் ஓய்வு பெறுதல் ஆகிய காரணங்களை மேற்கோள் காட்டி இளநிலை பொறியாளர்கள் மேம்பாட்டு பணிகளை மந்த கதியில் செயல்படுத்துகின்றனர். மேம்பாட்டுப் பணியில் வெறும் நான்கு, ஐந்து பேர் மட்டுமே பணி செய்து வருகின்றனர்.

இதற்கிடையே குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் திறக்கப்படும்.இன்னும் இரண்டு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் மந்தகதியில் நடைபெறும் பணியால் அணையில் நீர்த்தேக்க படுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இப்பகுதியில் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். எனவே, காரைக்கால் ஆட்சியரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் உடனடியாக விசாரணை நடத்தி மேம்பாட்டு பணிகளை முடுக்கி விட வேண்டும். இவ்வாறு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனம் மந்தகதியில் நடக்கும் அரசலாறு தடுப்பணை மேம்பாட்டு பணிகள்-விரைந்து முடிக்க பாசன விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: