விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் டிஆர்ஓ உறுதி

நாமக்கல், ஏப்.29: காவிரியாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் டிஆர்ஓ உறுதி அளித்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் டிஆர்ஓ கவிதா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் பேசுகையில், ‘மதுபாட்டில்களை திரும்ப கொடுத்தால் ₹10 கொடுக்கும் திட்டம் குறித்து சட்டபேரவையில் நான் தான் முதலில் பேசினேன். அதை ஏற்று அரசு மலை பிரதேசங்களில் முதலில் அமல்படுத்தியது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது கோவை மாவட்டத்தில், முழுமையாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும், இந்த திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்?.

காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால், பொதுமக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.இதற்கு பதில் அளித்த டிஆர்ஓ கவிதா, ‘காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திரும்ப ஒப்படைக்கப்படும் மதுபாட்டில்களுக்கு ₹10 திரும்ப தரும் திட்டம் குறித்து, அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், ‘மோகனூர் சாலையில் பல இடங்களில் குப்பைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்படுகிறது. வார சந்தைகளில் போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,’ என்றார். விவசாயி சரவணகுமார் பேசுகையில், ‘நாமக்கல் உழவர்சந்தையில் வியாபாரிகள் அதிகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்,’ என்றார். விவசாயி ரவிசந்திரன் பேசுகையில், ‘மாவட்ட அளவிலான கூட்டத்தில் அதிகாரிகள் சிலர் முறையாக கலந்து கொள்வதில்லை,’ என்றார்.

இதற்கு பதில் அளித்த டிஆர்ஓ, கூட்டத்திற்கு வராத அலுவலர்களுக்கு மெமோ அனுப்பப்படும். அடுத்த கூட்டத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும்,’ என்றார்.கூட்டத்தில் பேசிய விவசாயிகள், ராசிபுரம் தாலுகாவில் வனத்துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து. இதற்கு வனத்துறை அதிகாரிகள் உடந்தையாக செயல்படுகிறார்கள் என்றனர். கூட்டத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் கணேசன், வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் டிஆர்ஓ உறுதி appeared first on Dinakaran.

Related Stories: