கர்நாடகாவில் தேர்தலுக்கு முன் ‘ஆபரேஷன் தாமரை’ ஆரம்பம்: மனு வாபஸ் பெற்றால் ரூ.50 லட்சம், பதவி கவனிப்பு; கர்நாடக அமைச்சர் மஜத வேட்பாளரிடம் பேரம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பே பாஜ ஆபரேஷன் தாமரை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அமைச்சர் சோமண்ணா மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளரிடம் பதவி பேரம் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ், பாஜ தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேட்பு மனு தாக்கலின் போது அமைச்சர் சோமண்ணா தனது தொகுதியில் போட்டியிடும் மஜத வேட்பாளரை வாபஸ் பெற வைக்க ஆபரேஷன் தாமரை மூலம் பதவி ஆசை காட்டி வலைவிரிக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் சோமண்ணா , லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவர். பெங்களூரு கோவிந்தராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற சோமண்ணா, இந்த முறை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு எதிராக வருணா மற்றும் சாம்ராஜ்நகர் என இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார். வருணாவில் சோமண்ணாவின் தோல்வி உறுதி என்பது அனைவரும் அறிந்த நிலையில் சாம்ராஜ்நகரில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அமைச்சர் சோமண்ணா சில யுக்திகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒரு யுக்தியை வேட்புமனு வாபஸ் பெறும் நாளான அதாவது கடந்த 21ம் தேதி மஜத வேட்பாளர் ஆலுர் மல்லுவிடம் பயன்படுத்தியுள்ளார்.

வேட்புமனு வாபஸ் பெற்றால் செலவுக்கு ரூ.50 லட்சம் உடனடியாக தருவதாகவும் அடுத்து உங்களை மேலவை உறுப்பினராக்கி நன்றாக பார்த்துக்கொள்வதாகவும் சோமண்ணா ஆபரேஷன் தாமரை நடத்த ஆசை வார்த்தை கூறியுள்ளார். தொண்டர் ஒருவரின் செல்போனில் மஜத வேட்பாளர் ஆலுர் மல்லுவிடம் அமைச்சர் சோமண்ணா பேசிய வீடியோ கடந்த 21ம் தேதி இரவு வைரலானது. கடந்த ஐந்து நாளாக வைரலாகி வருகிறது. இதற்கிடையே , காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரமேஷ் பாபு அமைச்சர் சோமண்ணாவின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனாவிடம் நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு , இது போன்ற வீடியோக்களில் சில உண்மையும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். இந்த வீடியோ உண்மையா என ஆய்வு நடத்தி வருகிறோம். உண்மையாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

* காங்கிரஸ் ஆட்சி அமையும்
பெங்களூருவில் இயங்கிவரும் பெரிய கன்னட செய்தி சேனல் மற்றும் சி-ஓட்டர் ஆகியவை இணைந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தமுள்ள 224 தொகுதிகளி்ல் காங்கிரஸ் 106 முதல் 116 தொகுதிகளில் வெற்றி பெற்றும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பிடிக்கும். தற்போது ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 79 முதல் 89 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். மதசர்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 25 முதல் 34 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும். சில கட்சிகள் அல்லது சுயேட்சகைள் 4 முதல் 7 தொகுதிகளி்ல் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

* அமித்ஷா மீது போலீசில் புகார்
கர்நாடக மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தால் கர்நாடகாவில் கலவரம் ஏற்படும் என்று பேசினார். இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரும், கர்நாடக பொறுப்பாளருமான ரனதீப் சுர்ஜிவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் ஆகியோர் பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையம் சென்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மீது உடனடியாக புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.

* ஓபிஎஸ் வேட்பாளர் மீது மோசடி வழக்கு
கர்நாடகா தேர்தலில் காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளரான குமார் என்பவர், போலி ஆவணங்கள் அளித்து வேட்புமனு தாக்கல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் அளித்தது. இந்த புகாரை அடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்ட விரோதமாக அதிமுக பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாக, தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடகாவில் தேர்தலுக்கு முன் ‘ஆபரேஷன் தாமரை’ ஆரம்பம்: மனு வாபஸ் பெற்றால் ரூ.50 லட்சம், பதவி கவனிப்பு; கர்நாடக அமைச்சர் மஜத வேட்பாளரிடம் பேரம் appeared first on Dinakaran.

Related Stories: