எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு புதிய பிரிவு விரைவில் துவக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுநீரகம், கல்லீரல், மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான புதிய பிரிவு ரூ.57.30 கோடி துவங்கப்பட உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில், ரூ.68 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உபகரணங்களை பெற்றுக்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவற்றை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுநீரகம், கல்லீரல், மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான புதிய பிரிவு, ரூ.57.30 கோடி மதிப்புடன், விரைவில் துவங்க உள்ளது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ரூ.65 கோடி மதிப்பில் புதிய நரம்பியல் துறை கட்டிடம், கே.எம்.சி.யில் ரூ.114 கோடியில் புதிய கட்டிடம் கட்டவும், ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.147 கோடியில் செவிலியர்களுக்கான தங்கும் விடுதி மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டவும், பல் மருத்துவ கல்லூரிக்கு புதிய மாணவியர் தங்கும் விடுதி கட்டவும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையின் அடிப்படையில் 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு ரூ.40 கோடி மதிப்பில் தொடங்க உள்ளோம்.

இது போல, கடந்த வாரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சன் குழுமத்துடன் இணைந்து துணை சுகாதார மையங்களுக்கான சொந்த கட்டிட மையங்கள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்று அரசுக்கு தனியார் நிறுவனங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று 500க்கும் மேல் பதிவாகி இருந்த நிலையில், தற்பொழுது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. போதை பொருட்கள் மீதான தடை நீடித்து வருவதால், மேலும் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று காலை 10 மணிக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* குட்கா விற்பனை தடுக்க நடவடிக்கை
அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், கடத்த ஆட்சியில் குட்கா போதை பொருட்கள் எளிதில் கிடைத்ததாக சட்டப்பேரவையில் ஆதாரங்களோடு தெரிவித்த போது, திமுக உறுப்பினர்களின் பதவியை பறிப்பதற்கான முயற்சியில் அப்போதைய முதலமைச்சரும், சபாநாயகரும் ஈடுபட்டதை போல இல்லாமல், போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது, விற்பவர்களை கைது செய்வது, கடைகளுக்கு சீல் வைப்பது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது என்றார்.

The post எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு புதிய பிரிவு விரைவில் துவக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: