எதிர்கட்சிகளின் கூட்டணி முக்கியம்: பிரதமர் பதவி ஆசை எனக்கில்லை.! நிதிஷ் குமார் வெளிப்படையாக அறிவிப்பு

பாட்னா: லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் போட்டியில் இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமார், எனக்கு பதவி ஆசை இல்லை, நாட்டின் நலனுக்காக பாடுபடுவதே எனது முயற்சி என்று தெரிவித்தார். வரும் லோக்சபா தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவை நேற்று சந்தித்தனர்.

அப்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் குறித்து பேசிய நிதிஷ் குமார், ‘எனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்ததும், எங்கள் தலைவர் யார் என்பதையும் பின்னர் முடிவு செய்வோம்’ என்றார். தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘நாட்டின் ஜனநாயக விழுமியங்களை அழிக்க பாஜக முயற்சித்து வருகிறது. வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வறுமையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற நாங்கள் மக்களுடன் இருக்கிறோம்.

பாஜக அரசு வெளியேற வேண்டும், அப்போதுதான் நாட்டைக் காப்பாற்ற முடியும். பெரும்பாலான எதிர்க்கட்சிகளை கூட்டணியில் திரட்டி வரும் தேர்தலில் போட்டியிட உள்ளோம். முன்னதாக நேற்று ஹவுராவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post எதிர்கட்சிகளின் கூட்டணி முக்கியம்: பிரதமர் பதவி ஆசை எனக்கில்லை.! நிதிஷ் குமார் வெளிப்படையாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: