*வீடுகள் தோறும் நேரடி இணைப்பு
*கிராம மக்கள் உற்சாக வரவேற்பு
நிலக்கோட்டை : நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி இந்திராநகர் பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை தொடர்ந்து ரூ.13.5 லட்சம் செலவில் வீடுகள் தோறும் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி இந்திராநகர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திண்டுக்கல் – மதுரை தேசிய நான்கு வழிச்சாலை, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை உட்பட முக்கிய பகுதிகள் இந்த பேரூராட்சியின் அருகே அமைந்துள்ளன. இருப்பினும் இப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது என்பது காணல் நீராகவே இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் போர்வெல் மூலம் எடுக்கப்படும் நீரையே குடிநீர் உட்பட அனைத்து பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தற்போது முதல்முறையாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் அப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைது வருவதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் தற்போதைய நிலையில், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் தண்ணீரை பகிர்ந்தளிக்க போதிய வசதிகள் இல்லாததுடன், இந்த திட்டத்தின் கீழ் வரும் குடிநீரை பிடிக்க அப்பகுதி மக்கள் பள்ளங்கள் தோண்டுவதுடன் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையும் தொடர்கிறது.
இதையடுத்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கிடைக்கும் தண்ணீரை தங்கள் வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வளிக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றம் முடிவு செய்தது. இதன்படி ஊராட்சி தலைவர் மாயாக்காள் 15வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.8.50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதன்மூலம் வீடுகள் தோறும் இலவச தனித்தனி குடிநீர் இணைப்புகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதன் காரணமாக இனி அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில், அனைத்து தெருக்களிலும் இரும்பு குழாய்கள் அமைத்து வீடுகள் தோறும் தனித்தனி குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவர் மாயாக்காள் கூறும்போது, கடந்த 40 ஆண்டுகளாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டமும் இக்கிராமத்தில் செயல்படுத்தவில்லை. இதனால் நீரினால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் இங்குள்ளவர்களை தாக்கி வந்தது. மேலும் கோடை காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு செல்லும்போது, குடிநீர் கிடைப்பது என்பது மிக சவாலானதாக மாறியது. இதற்கிடையே பல்வேறு பகுதிகளிலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இருப்பினும் இந்த பகுதி மக்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கும், குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தோம்.
இதன் பயனாக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு முதல் குடிநீர் வழங்கப்பட்டது. இருப்பினும் முறையாக வழங்க போதிய நீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் குழாய் அமைப்புகள் இல்லாமல் இருக்கிறது. இதனால் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஊராட்சி நிர்வாகம் பதினைந்தாவது நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.8.5 லட்சம் ஒதுக்கீடு செய்து அனைத்து தெருக்களிலும் இரும்பு பைப்புகள் அமைத்து வீடுகள் தோறும் தனித்தனி இலவச குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டு பணிகள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டது, உடனடியாக தமிழ்நாடு அரசு மற்றும மாவட்ட நிர்வாக உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 15 தினங்களுக்குள முடிக்கப்பட்டு வீடுகள் தோறும் தனித்தனி இணைப்புகள் வாயிலாக மக்கள் குடிநீர் பெறலாம். இதனால் குடிநீர் விநியோகத்தில் தன்னிறைவு பெற்ற கிராமமாக இது உருவாகும் என்றார்.
The post நிலக்கோட்டை ஊராட்சி மாலையகவுண்டன்பட்டியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண ரூ.13.5 லட்சத்தில் பணிகள் appeared first on Dinakaran.
