கோடை வெயில் படுத்தும் பாடு தாகம் தணிக்க திருமூர்த்தி அணைக்கு படையெடுக்கும் யானைக்கூட்டம்

உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் தாகம் தீர்ப்பதற்காக காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக மாலை வேளைகளில் வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ளது திருமூர்த்தி அணை. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்டது. சர்க்கார் பதி பவர் ஹவுஸ் வழியே கான்டூர் கால்வாயின் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மெகா சைஸ் தொட்டியான இந்த அணைக்கு கான்டூர் கால்வாயின் வழியே வரும் தண்ணீரே முக்கிய நீர் ஆதாரமாகும். சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலான கான்டூர் கால்வாயில் தாகம் தணிப்பதற்காக அமராவதி உடுமலை வனச்சரகப் பகுதிகளை சேர்ந்த மான், காட்டுப்பன்றி, யானை, காட்மாடுகள்உள்ளிட்ட வனவிலங்குகள் வருவது வழக்கம். வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் வழக்கமாக அமராவதி அணைக்கு தான் யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் அருந்த வரும்.

இந்த முறை ஈசல் திட்டு கிழக்குப் பகுதியில் இருந்து யானைகள் தாகம் தணிப்பதற்காக திருமூர்த்தி அணையை நோக்கி படையெடுக்கின்றன.கடந்த ஒரு வாரமாக ஜல்லிப்பட்டி கொங்கரா குட்டை பகுதிகளில் உள்ள மாந்தோப்பு தென்னந்தோப்பு உள்ளிட்ட விலை நிலங்களுக்குள் புகுந்த யானைக் கூட்டம் பகல் வேளைகளில் தோட்டங்களுக்குள் மா தென்னை உள்ளிட்டவற்றைத் தின்று ஓய்வு எடுத்து வருவதுடன் மாலை வேளைகளில் திருமூர்த்தி அணைக்கு வந்து தாகம் தணிக்கின்றன.

குட்டிகளுடன் 10 முதல் 12 யானைகள் வரை கூட்டமாக அணையில் இறங்கி தண்ணீர் குடிப்பதை திருமூர்த்தி அணைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

The post கோடை வெயில் படுத்தும் பாடு தாகம் தணிக்க திருமூர்த்தி அணைக்கு படையெடுக்கும் யானைக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: