ரம்ஜான் பண்டிகையால் களைகட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை ஒரே நாளில் ரூ.1.50 கோடிக்கு ஆடு விற்பனை

*கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி

அய்யலூர் : ரம்ஜான் பண்டிகையையொட்டி அய்யலூர் ஆட்டு சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.1.50 கோடிக்கு விற்பனை நடந்தது. இதனால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடப்பது வழக்கம். நாளை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அய்யலூர் ஆட்டுச்சந்தை நேற்று களைகட்டியது. அதிகாலை முதலே வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.

வெள்ளாடுகளை காட்டிலும் செம்மறி ஆடுகளே அதிகளவில் விற்பனையானது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு, செம்மறி ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400 வரையிலும், சண்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டு சேவல்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

வியாபாரிகள் கூறுகையில், ‘‘நாளை ரம்ஜான் பண்டிகை என்பதால் அய்யலூர் ஆட்டுச்சந்தையில் நேற்று ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடந்தது. இதன்மூலம் ஒரே நாளில் ரூ.1.50 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது’’ என்றனர். ஆடு, கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்தனர்.

The post ரம்ஜான் பண்டிகையால் களைகட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை ஒரே நாளில் ரூ.1.50 கோடிக்கு ஆடு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: