அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து முன்னதாக தனித்தனியான அணியாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்த பின்னர் அதிமுக கட்சியில் பல்வேறு சட்ட விதிகளை மாற்றம் செய்து பொதுச்செயலாளர் என்ற பதவியை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை கொண்டு வந்து கட்சியை இருவரும் நிர்வகித்து வந்தனர். இருப்பினும் அதிமுக என்ற கட்சியில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடு ஆகியவை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்குமிடையே தொடர்ந்து இருந்து வந்தது.

மேலும் இதைத்தொடர்ந்து அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு அதுகுறித்த கருத்தும் அவரது ஆதரவாளர்கள் மூலம் வெளியிடப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் இடையிலான மோதல் மேலும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அதிமுகவில் கிட்டதட்ட கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒற்றை தலைமை சிக்கல் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இதில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மீண்டும் வழக்கு தொடர்ந்தார். முதலாவதாக அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, ஓ.பி.எஸ் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது வரையில் விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், அதேப்போன்று கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்றும், மேலும் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த இரண்டு ரிட் மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பத்து நாட்களில் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஏப்ரல் 12ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த காலக்கெடுவானது இன்றோடு முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து மேற்கண்ட டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. அப்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், ஆணையர்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் பெரும்பான்மை உட்பட அனைத்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது முடிவை நேற்று வெளியிட்டது. அதில்,‘‘அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லத்தக்க ஒன்றாகும். மேலும் அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் ஆகியவையும் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனையின் போது எடப்பாடி பழனிசாமிக்கு அதிகப்பெரும்பான்மை இருப்பதை அடிப்படையாகக் கொண்டு தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நடைபெறவிருக்கும் கர்நாடகா சட்டபேரவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமின் கோரிக்கையில் அடிப்படையில் அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவை அனைத்தும் நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கு கட்டுப்பட்டதாகும் என தெரிவித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார்.

* கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்.
* பொதுச்செயலாளராக எடப்பாடிக்கு அங்கீகாரம். இரட்டை இலை சின்னமும் அவருக்குதான்.

The post அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடிக்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: