இளையபெருமாளுக்கு நினைவரங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறினார் திருமாவளவன்

சென்னை: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய இளையபெருமாளுக்கு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தொல்.திருமாவளவன் நன்றி கூறினார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளையபெருமாளுக்கு நினைவரங்கம் சிதம்பரம் நகரில் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வரை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்து இருக்கிறோம்.

தற்போது தலித் கிறிஸ்தவர்கள் தொடர்பான தனி தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையிலே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய நிறைவேற்றி இருக்கிறார். இதுவும் நீண்ட காலத்திற்கு இந்திய ஒன்றிய அரசு தலித் கிறிஸ்தவர்களை ஆதிதிராவிட பட்டியல் இனத்தில் இணைக்க வேண்டும், அவர்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்கிற வகையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த தமிழ்நாடு அரசு முன் வந்திருக்கிறது.

இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நடவடிக்கை, முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்தோம். துணை திட்டங்களுக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதனையும் இந்த நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அறிவித்திருக்கிறார். அடுத்த கூட்டத்தொடரில் அது சட்டமாக்கப்படும் என்கிற உறுதியும் அளித்திருக்கிறார். இந்த அறிவிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆகவே ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் முதல்வரை நேரில் சந்தித்து எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறோம். இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சிகரமான சந்திப்பாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

The post இளையபெருமாளுக்கு நினைவரங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறினார் திருமாவளவன் appeared first on Dinakaran.

Related Stories: