மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக ₹2.18 லட்சத்திற்கு 10 ரூபாய் நாணயங்களை கோர்ட்டில் ஒப்படைத்த கணவரால் பரபரப்பு

சங்ககிரி: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தேவண்ணகவுண்டனூர் கிடையூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜீ (57). தனியார் நிறுவனத்தில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஜீவனாம்சம் கேட்டு, சங்ககிரி 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் சாந்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சாந்திக்கு மாதந்தோறும் ₹3 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அந்த தொகையை சரியாக கொடுக்காததால், மீண்டும் சங்ககிரி கோர்ட்டில் சாந்தி மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, நிலுவை தொகையான ₹2.18 லட்சத்தை ராஜீ கட்ட வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து ராஜீ நேற்று, சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நிலுவை ஜீவனாம்சம் தொகையை செலுத்த வந்தார். அவர் 10 ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் மூட்டையாக கட்டி ₹2.18 லட்சத்தை எடுத்து வந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். இதனால், கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு, கூடியிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

The post மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக ₹2.18 லட்சத்திற்கு 10 ரூபாய் நாணயங்களை கோர்ட்டில் ஒப்படைத்த கணவரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: