புதுச்சேரியில் கோயில் விழா நடத்தும் நிலத்தை உரிமை கோரும் தனியார் நிறுவனம்: நிலத்தை மீட்டுத்தரும்படி சட்டமன்றத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்

புதுச்சேரி: புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் ஆண்டுதோறும் கோயில் விழா நடத்தும் நிலத்தை மீட்டு தரக்கோரி மீனவர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர். வம்பாகீரப்பாளையத்தில் உள்ள சன்னாசி தோப்பில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மயான கொள்ளை விழாவுக்கு கோயில் அருகே உள்ள திடல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

சமீபத்தில் அந்த நிலத்தை தனியார் நிறுவனம் தங்களுக்கு சொந்தமானது என கூறியதால் அதிர்ச்சியடைந்த மீனவ மக்கள் முதல்வரை சந்திக்க திட்டமிட்டனர். அதன்படி இன்று நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், மீனவ பஞ்சாயத்து நிர்வாகிகள் ஆகியோர் சட்டப்பேரவைக்குள் நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

சிறிது நேர சலசலப்புக்கு பிறகு தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், கிராமத்து முக்கிய நிர்வாகிகளை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்தார். அப்போது நிலம் தவறாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என சார் பதிவாளர், நில அளவை பதிவேடு இயக்குநர் மூலம் விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். முன்னதாக மீனவர்களின் ஆவேச பேச்சால் கோபமடைந்த முதலமைச்சர் தன்னிடம் சத்தமாகவும், கோபமாகவும் பேசக்கூடாது என எச்சரித்தார்.

The post புதுச்சேரியில் கோயில் விழா நடத்தும் நிலத்தை உரிமை கோரும் தனியார் நிறுவனம்: நிலத்தை மீட்டுத்தரும்படி சட்டமன்றத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: