திருட்டு பையன் என்று சொல்வியா நீ என கேட்டு… போதையில் எஸ்.ஐயை தாக்கிய இளம்பெண் உட்பட 3 பேர் கைது: சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் பரபரப்பு

சென்னை: திருட்டு பையன் என்று சொல்வியா நீ… என வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐயை பணி செய்ய விடாமல் தாக்குதல் நடத்திய இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 16ம் தேதி இரவு நெல்சன்மாணிக்கம் சாலையில் சூளைமேடு எஸ்ஐ லோகிதர்ஷன் தலைமையில், காவலர் ெவள்ளத்துரை உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக பைக்கை தள்ளி கொண்டு வந்துள்ளார். இதை கவனித்த எஸ்ஐ ஒருவர், அந்த வாலிபரை அழைத்து வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘ஆவணங்கள் கையில் இல்லை, வீட்டில் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

உடனே போலீசார், ‘பைக் உங்களுடையதா அல்லது திருட்டு வண்டியா’ என்று கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாலிபர், தனது உறவுக்கார பெண் ஒருவருக்கு போன் செய்து அழைத்துள்ளார். அந்த இளம்பெண், வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐயிடம் வந்து, ‘யாரை திருட்டு பையன் என்று சொன்னாய்.. நீ தான் ப்ராடு… வண்டியை தள்ளி கொண்டு வந்தால் பைன் போட கூடாது’ என்று கடும் வாக்குவாதம் செய்தார். இதை போலீசார், தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். உடனே அந்த இளம்பெண், ‘நீ வீடியோ எடு… பேஸ்புக்கில் போடு… என்னை ஒன்றும் புடுங்க முடியாது’ என்று ஒருமையில் பேசினார்.

அப்போது, தடுக்க முயன்ற காவலர் வெள்ளத்துரையின் சட்டையை பிடித்து அந்த பெண் தாக்கினார். மேலும் எஸ்ஐயை பார்த்து, மீண்டும் மீண்டும் நீதான் ஒரு ப்ராடு என்பது எனக்கு தெரியும் என்று திட்டுகிறார். மேலும் அங்கிருந்த போலீசாரை பார்த்து, ‘நீங்கள் அனைவருமே ப்ராடு தான். வண்டியை தள்ளி கொண்டு வந்தால் பைன் போட கூடாது, உங்கள் ரூல்ஸ் புத்தகத்தை காட்டு.. வண்டிய தள்ளி கொண்டு வந்தால் பைன் போடலாமா என்று.. உடனே எஸ்ஐ, ‘நாளை காலையில் காவல்நிலையத்திற்கு வாங்கமா’ என்று கூறுகிறார். அதற்கு அந்த பெண், ‘ஓகே எம்எல்ஏவை அழைத்து வரட்டா… யாரை அழைத்து வரவேண்டும் என்று சொல்லுங்கள்’ என்று ஒருமையில் மீண்டும் பேசுகிறார்.

அதற்கு போலீசார், ‘நீங்கள் யாரை வேண்டுமானாலும் அழைத்து வாங்க’ என்றார். வாகன சோதனையின் போது பெண் ஒருவர் ஒருமையில் பணியில் ஈடுபட்ட போலீசாரை பேசுவதும், அடிக்க பாயும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே வாகன சோதனையின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாக காவலர் வெள்ளத்துரை சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், அந்த வீடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போது, அந்த பெண், சூளைமேடு பகுதியை சேர்ந்த அக்ஷ்யா (32) என்பதும், அவரது கணவர் சத்யராஜ், நண்பர் வினோத் என்பதும் தெரிய வந்தது.

போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அக்ஷ்யா, அவரது கணவர் ஆகியோர் மது போதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து சூளைமேடு போலீசார், அக்ஷ்யா, அவரது கணவர் சத்யராஜ், வினோத் ஆகியோர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல் நடத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post திருட்டு பையன் என்று சொல்வியா நீ என கேட்டு… போதையில் எஸ்.ஐயை தாக்கிய இளம்பெண் உட்பட 3 பேர் கைது: சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: