கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு சீட் கொடுக்க பாஜக மறுப்பு: ஆதரவு தராவிட்டால் தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் என அமித்ஷா மிரட்டல்

சென்னை: கர்நாடகா தேர்தலில் எடப்பாடி அணிக்கு சீட் ெகாடுக்க பாஜக மறுத்து விட்டது. அதோடு அதிமுக ஆதரவு தராவிட்டால் தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலை ஏற்படும் என்று பாஜக மேலிடம் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி திணறி வருகிறார். கர்நாடகா மாநிலத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கியது.

அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. தென் மாநிலங்களில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாதான். இதனால் இங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாகவே உள்கட்சி மோதல் தீவிரமாகி வருகின்றது. எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிய பிறகு அங்கு மோதல் தீவிரமாகி வருகிறது. அதேநேரத்தில் 21 எம்எல்ஏக்களுக்கு சீட் கொடுக்க பாஜக தலைமை மறுத்து விட்டது. இதனால் பலர் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர். தற்போது காங்கிரஸ் மெஜாரிட்டி தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், கர்நாடகாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கருதிய பாஜக, தமிழர்களின் ஆதரவுக்காக அதிமுகவின் ஆதரவை கேட்டு வருகிறது. குறிப்பாக அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி வசம் உள்ளது. இதனால், அதிமுகவின் ஆதரவு கேட்டு அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, இதுவரை பாஜகவுக்கு ஆதரவு தராமல் 3 முதல் 5 சீட் வரை வேண்டும் என்று கேட்டு வருகிறார். ஆனால் பாஜக மேலிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியது. ஏற்கனவே பாஜகவினருக்கே சீட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறோம். அதில் அதிமுகவுக்கு சீட் எப்படி கொடுப்பது என்று மேலிடம் திகைத்தது. இதனால் ஆதரவு மட்டுமே வேண்டும் என்று கூறியது.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, தனக்கு சீட் வேண்டும். அப்படி சீட் கிடைத்தால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம் என்று கருதினார். இந்தநிலையில் பாஜக மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 210 தொகுதிக்கு வேட்பாளரை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தநிலையில் நேற்று இரவு 10 தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து விட்டது. மீதம் 2 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இதனால் அதிமுகவுக்கு சீட் இல்லை என்று பாஜக கை விரித்து விட்டது. தற்போது, கர்நாடகாவைப் பொறுத்தவரை 15 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் அதிமுகவின் ஆதரவு தேவை என்று பாஜக மேலிடம் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறியுள்ளது. ஆனால் அவரோ பதில் அளிக்காமல் உள்ளார்.

மேலும் கர்நாடகாவில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளோம். இதனால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் அதிமுக வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் வருகிற 20ம் தேதிக்குள் தங்கள் முடிவை தெரிவிப்பதாக தேர்தல் ஆணையம் கூறி விட்டது. ஆனால் 20ம் தேதிதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அன்று தேர்தல் ஆணையம் கூறினாலும், அதிமுகவால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. அப்படி செய்தாலும் கூட்டணியில் இல்லாமல் தனித்துதான் போட்டியிட வேண்டியது வரும். அதேநேரத்தில் பாஜக மேலிடமும் ஆதரவு கேட்டு தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் உள்ளார்.

The post கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு சீட் கொடுக்க பாஜக மறுப்பு: ஆதரவு தராவிட்டால் தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் என அமித்ஷா மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: