கர்நாடக மாநிலம் கோலாரில் பரப்புரை: சர்ச்சையான இடத்திலேயே மீண்டும் இன்று உரையாற்றுகிறார் ராகுல் காந்தி..!

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி கோலாரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொள்கிறார். கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் இப்போதே கர்நாடகாவுக்கு வருகை தந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாநிலத்தில் உள்ள கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையில், தற்போது 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி கோலாரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று பரப்புரை மேற்கொள்கிறார். டெல்லியில் இருந்து இன்று ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் பெங்களூர் வருகிறார். அங்கிருந்து கோலார் தொகுதிக்கு செல்லும் ராகுல் காந்தி ஜெய் பாரத் பேரணியில் பங்கேற்கிறார். இன்று மாலை பெங்களூர் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

முன்னதாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, இதே கோலாரில் நடந்த கூட்டத்தில் மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தொடரப்பட்ட குற்றவியல் வழக்கில் சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23ம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதற்கு அடுத்த நாள் தகுதி இழப்பு நடவடிக்கைக்கு உள்ளானார். இதற்கிடையில், அடுத்த மாதம் 10ம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுலின் கோலார் வருகை கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

The post கர்நாடக மாநிலம் கோலாரில் பரப்புரை: சர்ச்சையான இடத்திலேயே மீண்டும் இன்று உரையாற்றுகிறார் ராகுல் காந்தி..! appeared first on Dinakaran.

Related Stories: