வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த நாங்களும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் வன்னியர் தனி ஒதுக்கீட்டை பின்பற்றும் வகையில் நடவடிக்கை தேவை என ஜி.கே.மணி கூறினார்.

வன்னியர் தனி இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்யும் ஆணையத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, பாமக ஜி.கே.மணி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில் அவசர கோலத்தில் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. நீதிமன்றத்தில் தடை வந்ததால் தான் தமிழ்நாடு அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்தவுடன் 10.5 சதவீதம் தனி ஒதுக்கீட்டை திமுக அரசு சிறப்பாக நிறைவேற்றும் என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. வன்னியர் தனி ஒதுக்கீடு, யார் செய்திருந்தாலும் அது மக்களுக்கானது என நாங்களும் தொடர்ந்தோம். ஆணையம் 3 மாத காலத்துக்குள் பணியை முடிக்காததால் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நீட்டிக்கவில்லை, ஆணையம் கேட்டதன் அடிப்படையில்தான் கால நீட்டிப்பு செய்யப்பட்டது என்று கூறினார். சமூக நீதி அரசை வழிநடத்தும் முதலமைச்சர் மீண்டும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று த.வா.க. உறுப்பினர் வேல்முருகன் தெரிவித்தார்.

The post வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீட்டை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.

Related Stories: