பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 2 வீரர்கள் தேனி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்!!

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 2 தமிழக வீரர்களின் தகவல்கள் வெளிவந்துள்ளன. பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் உள்ள ராணுவ முகாம் நாட்டின் மிகப் பெரிய ராணுவ நிலையங்களில் ஒன்றாகும். இங்கு ராணுவத்தின் அனைத்து படைப் பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த ராணுவ முகாமிற்குள் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் தூங்கி கொண்டிருந்த சாகர் பானே (25), யோகேஷ் குமார் (24) துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.

அதே போல், அருகில் இருந்த மற்றொரு அறையில் சந்தோஷ் நாகரால் (25), கமலேஷ் (24) ஆகியோர் இறந்து கிடந்தனர். அவர்களது உடம்பில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட அடையாளம் காணப்பட்டது. உயிரிழந்த வீரர்களில் இருவர் தமிழ்நாட்டையும் இருவர் கர்நாடக மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் நங்கப்பள்ளி அருகே பெரிய வனவாசி மஸகாலியூர் பனங்காட்டை சேர்ந்த நெசவு தொழிலாளி ரவியின் மகன் கமலேஷ் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாத கமலேஷ் 1.5 ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறைக்கு சொந்த ஊர் வந்துவிட்டு திரும்பி சென்றுள்ளார்.மற்றொருவர் தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியைச் சேர்ந்த ஜெயராஜின் மகன் யோகேஷ் குமார் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் நாளை சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து சொந்த ஊரில் ராணுவ வீரர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்று ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படும். முதல் கட்ட விசாரணையில் இது தீவிரவாத தாக்குதல் இல்லை. சகோதரர்களிடையேயான சண்டை கொலையில் முடிந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. தற்போது பஞ்சாப் போலீசாருடன் சேர்ந்த ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே 2 மர்ம நபர்கள் வெள்ளை பைஜாமா அணிந்து கையில் துப்பாக்கி மற்றும் கோடாரியுடன் வெளியே வந்ததை பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

The post பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 2 வீரர்கள் தேனி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: