மழைநீர் கால்வாய் பணியின்போது வீட்டு மின் இணைப்புகள், குடிநீர் குழாய் துண்டிப்பு: பொதுமக்கள் போராட்டம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மழைநீர் கால்வாய் பணியின்போது குடிநீர் குழாய், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதை கண்டித்து அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூரில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி திருவொற்றியூர், அம்பேத்கர் நகர் மெயின் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்க, பொக்லைன் இயந்திரம் மூலம் ராட்சத பள்ளம் தோண்டும் பணி நடைபெறுகிறது. இந்த பணியின்போது அப்பகுதியில் குடியிருப்புக்குச் செல்லும் குடிநீர் குழாய் மற்றும் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் பிரச்னையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

உடைந்த குழாய் வழியாக கழிவுநீர் கலந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கோடைவெயில் தொடங்கிய நிலையில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் உடைக்கப்பட்ட குழாய் மற்றும் மின் வயர்களை உடனடியாக சரி செய்ய வேண்டுமென்று பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் நகரில் மழைநீர் கால்வாய் பணி நடக்கும் இடத்திற்குச் சென்று, சேதமடைந்த குடிநீர் குழாய் மற்றும் மின் வயர்களை சரி செய்ய வேண்டும், அதுவரை பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று நேற்று அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் சேதமடைந்த குழாய் மற்றும் மின் வயரை சரிசெய்து தருவதாகவும், குடிநீர் குழாய்கள், மின்சார வயர்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகள் நடக்கும் என்றும் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

The post மழைநீர் கால்வாய் பணியின்போது வீட்டு மின் இணைப்புகள், குடிநீர் குழாய் துண்டிப்பு: பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: