ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ2,438 கோடி மோசடி விவகாரம்; இயக்குநர் ஹரீஷிடம் பணம் பெற்ற பாஜ நிர்வாகிகள் 2 பேருக்கு சம்மன்

  • மிரட்டி பறித்த ரூ130 கோடி பணத்தில் தனியாக நிறுவனம் தொடங்கினார்
  • போலீஸ் விசாரணையில் பகீர் தகவல் வெளியானது
  • முக்கிய நிர்வாகிகளும் கைதாக வாய்ப்பு

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் இயக்குநர்களில் ஒருவரான ஹரீஷிடம் பணம் பெற்ற, பாஜ நிர்வாகிகள் 2 பேருக்கு நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் சம்மன் அனுப்பட்டுள்ளது. மேலும், ஆருத்ரா நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகரை மிரட்டி ரூ.130 கோடி பறித்த பணத்தில், தனியாக நிறுவனம் தொடங்கியதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்த வழக்கில் பாஜவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இது பாஜவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘ஆருத்ரா’ என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதம் 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்து, தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு மக்களிடம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேரிடம் சுமார் ரூ.2,438 கோடி பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள், ஏஜென்டுகள் மீது மோசடி உள்ளிட்ட 7 க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மோசடி தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், அதன் இயக்குநர்கள் வீடுகள், ஏஜென்டுகள் வீடுகள் என 57 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள், எஸ்பி.மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் சோதனை நடத்தி ரூ.5.69 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள், ஏஜென்ட்களின் 120க்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் இருந்த ரூ.96 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் 97 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், நிதி நிறுவன இயக்குநர்களாக இருந்த 16 நபர்களில், பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், பாஜ முன்னாள் பிரமுகர் ஹரீஷ், பேச்சி முத்துராஜ்(எ)ரபீக், ஐயப்பன், ரூசோ, நாகராஜ், மாலதி 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய குற்றவாளிகளான ‘ஆருத்ரா’நிதி நிறுவன உரிமையாளர் ராஜசேகர், உஷா, தீபக் கோவிந்த் பிரசாத், நாராயணி, ரூமேஷ்குமார் ஆகிய 5 பேர் இன்னும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ளனர். இதனால், உரிமையாளர் ராஜசேகர் உட்பட 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தை சேர்ந்த முன்னாள் பாஜ மாநில விளையாட்டு மேம்பாட்டு பிரிவு செயலாளராக இருந்த ஹரீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் 11 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. ஹரீஷ் பாஜ மாநில பொறுப்பில் இருந்ததால், அவர் பாஜ மாநில முக்கிய நிர்வாகிகள் பலருடன் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும், இந்த மோசடியில் இருந்து தன்னை காப்பற்ற கோரி பலருக்கு பல கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காஞ்சிபுரத்தில் ஹரீஷ் தலைமையில் ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு ரூ.210 கோடி வசூலித்து வங்கி கணக்குகள் மூலம் டெபாசிட் செய்துள்ளார். அதேநேரம், டெபாசிட் செய்த பணத்தை ஆருத்ரா நிதி நிறுவனம் உரிமையாளர் ராஜசேகரை கடத்தி சென்று வடமாநில கட்சியின் மாநில தலைவர் ஒருவர் மூலம் மிரட்டி ரூ.130 கோடி பணத்தை ஹரீஷ் பெற்றுள்ளார். அந்த பணத்தை ராஜசேகர் வங்கி கணக்குகள் மூலம் கொடுத்துள்ளார்.

மிரட்டி பறித்த ரூ.130 கோடி பணத்தை தனது பெயரிலும், உறவினர்கள் பெயர்களில் ரூ.15 கோடிக்கு மேல் 30 இடங்களில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் ஹரீஷ் மோசடி பணத்தை பாஜக நிர்வாகிகள் சிலருடன் இணைந்து ‘ஒன் மேன் குரூப்ஸ்’ என்ற பெயரில் தொழில் தொடங்கியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த மோசடி பணத்தை ஹரீஷ், பாஜ வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அலெக்ஸ் மற்றம் ராணிப்பேட்டையை சேர்ந்த பாஜ நிர்வாகி டாக்டர் சுதாகர் மற்றும் சில பாஜ நிர்வாகிகளுக்கு பல கோடி ரூபாய் வரை பணத்தை எந்த வித கணக்குகளும் இல்லாமல் வாரி வழங்கியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் அனைத்து ஹரீஷிடம் நடத்திய விசாரணையில் உறுதியாகி உள்ளது. எனவே ஹரீஷிக்கு உடந்தையாக இருந்த பல்லாவரத்தைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை பாஜ நிர்வாகி டாக்டர் சுதாகர் நேரில் வந்து விளக்கம் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும், 11 நாள் விசாரணையின் போது, ஹரீஷ் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், சொகுசு கார் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா மோடி வழக்கில் ஏற்கனவே ரூ.12 கோடி பணம் பெற்று துபாயில் தலைமறைவாக உள்ள பாஜ நிர்வாகி ஆர்.கே.சுரேஷிக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், மேலும், 2 பாஜ நிர்வாகளுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கிடையில், கட்சியில் சேர்ந்த அன்றே ஹரீசுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பெரும் அளவில் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால்தான், பாஜவைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி மூலம் அண்ணாமலையைப் பிடித்து பதவியை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவில் முக்கிய நிர்வாகி விரைவில் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ2,438 கோடி மோசடி விவகாரம்; இயக்குநர் ஹரீஷிடம் பணம் பெற்ற பாஜ நிர்வாகிகள் 2 பேருக்கு சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: