இந்தியா குறித்து லண்டனில் பேசிய விவகாரம்: ராகுலை மறைமுகமாக சாடிய துணை ஜனாதிபதி

புதுடெல்லி: இந்தியா குறித்து லண்டனில் பேசிய விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தியை மறைமுகமாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் சாடி பேசினார். குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தங்கர், டெல்லியில் உலக ஹோமியோபதி தினம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசுகையில், ‘வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவுக்கு வருகை தரும் போது, அவர் தனது நாட்டை பற்றி விமர்சிப்பதையோ அல்லது இழிவுபடுத்துவதையோ எப்போதாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் சிலர் ஏன் இதைச் செய்கிறார்கள் என்பதுதான் கவலையளிக்கிறது.

நம்முடைய நாட்டின் விஞ்ஞானிகள், சாதனையாளர்களை பற்றி ஏன் பெருமிதம் கொள்ளக்கூடாது? நம்முடைய கண்டுபிடிப்புகளை ஏன் பறைசாற்றக் கூடாது? ஒவ்வொருவருக்கும் தனது சொந்த திறமையின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். சுயலாபத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்று தங்களது அரசியல் முகத்தைக் காட்டுவதை கைவிட வேண்டும்’ என்றார். ஜக்தீப் தங்கர் தனது உரையில், எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்தியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சுட்டிக் காட்டினார். கடந்த சில வாரங்களுக்கு முன் லண்டன் சென்ற ராகுல்காந்தி, இந்திய ஜனநாயகம் தாக்கப்படுவதாகவும், ஜனநாயக அமைப்புகள் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் பேசினார். இதனால் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜக நாடாளுமன்றத்தை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியா குறித்து லண்டனில் பேசிய விவகாரம்: ராகுலை மறைமுகமாக சாடிய துணை ஜனாதிபதி appeared first on Dinakaran.

Related Stories: