வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி போர்வெல் லாரி உரிமையாளரிடம் பண மோசடி

பல்லடம்,ஏப்.11:பொங்கலூர் அருகே பெருந்தொழுவு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் போர்வெல் லாரிகள் வைத்துள்ளார். இவரிடம் 30 பேர் பணியாற்றி வருகின்றனர். இவரிடம் ஒடிசாவை சேர்ந்த நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு போர்வெல் போடும் வேலைக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள் தன்னிடம் இருப்பதாகவும். அவர்களை அனுப்பி வைக்க ரயில் டிக்கெட், உணவிற்கு நபர் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். மூர்த்திக்கும் ஆட்கள் தேவை இருந்ததால் அவர்கள் கேட்ட தொகையை இணையதளம் மூலம் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரிரு நாட்கள் கழித்து அந்த நபரிடம் ஆட்கள் வந்துவிட்டார்களா என்று மூர்த்தி கேட்டுள்ளார்.

அதற்கு அவர்களது போட்டோ மற்றும் ஆதார் கார்டு நகல்களை வாட்ஸ் அப்பிற்கு அனுப்பியதோடு அவர்கள் திருப்பூர் பெருமாநல்லூர் வந்துவிட்டார்கள் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள்.

மேலும் கூடுதலாக ஆட்கள் வந்து கொண்டுள்ளனர். மேலும் ஆட்கள் வேண்டுமானால் அதற்குரிய தொகையை செலுத்தினால் தங்களுக்கு அவர்களை அனுப்பி விடுவேன். இல்லை என்றால் அவர்கள் திட்டமிட்டபடி கேரளாவிற்கு சென்று விடுவார்கள் என்று சொல்லியுள்ளார். மூர்த்திக்கும் கூடுதலாக ஆட்கள் தேவைப்பட்டதால் மேலும் ரூ.20 ஆயிரத்தை ஒடிசா நபருக்கு அனுப்பி உள்ளார். சிறிது நேரம் கழித்து அவரை தொடர்பு கொண்ட போது போன் அணைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து சக போர்வெல் இயந்திர வாகன உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்த போது தாங்களும் இது போன்று ஏமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் சைபர் கிரைம் காவல் துறையினரிடம் மூர்த்தி புகார் அளிக்கவே, போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக கூறி போர்வெல் லாரி உரிமையாளரிடம் பண மோசடி appeared first on Dinakaran.

Related Stories: