டெல்டா பகுதிகளில் 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து : தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு!!

சென்னை : தமிழக டெல்டா பகுதிகளில் 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம் 29-ந்தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய 3 பகுதிகள் இடம்பெற்று உள்ளன. இந்த 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும். ஏற்கனவே, தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அமைச்சர் பிரகாலத் ஜோஷி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக ஒன்றிய அமைசச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். ஏல பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுவதாக பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “ஒன்றிய அமைச்சர் திரு @JoshiPralhad

அவர்கள் நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது பாரதப் பிரதமர் திரு @narendramodiஅவர்கள். தமிழக விவசாயிகள் மற்றும் @BJP4TamilNadu சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றுத் தெரிவித்துள்ளார். இதனிடையே தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்தாகி உள்ளதாக விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post டெல்டா பகுதிகளில் 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து : தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.

Related Stories: