ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்: ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.108 வைணவ தலங்களில் முதன்மையானது, பூலோகம் வைகுண்டம் என போற்றப்படுவது திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இதை முன்னிட்டு தாயார் சன்னதியில் இருந்து நம்பெருமாள் கீழசித்திரைவீதியில் உள்ள கோரத்தில் காலை 10.30 மணியளவில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து ரதரோஹணம் ரதயாத்திரை நடந்தது. அதன்பின் காலை 10.45 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதுசமயம் திரளான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டவாறு தேரின் வடத்தை பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்தனர். தேரின் நிலையில் இருந்து புறப்பட்ட தேர் நான்கு சித்திரை வீதிகள் வலம் வந்து மதியம் 2.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு சந்தனு மண்டபம் சேர்ந்தார். மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் நடந்தது. இரவு 9 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 10.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். 11ம் நாளான இன்று (7ம்தேதி) இரவு 7.30 மணிக்கு நம்பெருமாள் வாகன மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்: ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: