புதுக்கோட்டையில் ஓஎன்ஜிசியின் 4 எண்ணெய் கிணறுகளை மூட ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை சுற்றிய பகுதிகளான வானக்கண்காடு, கோட்டைக்காடு, கருக்காகுறிச்சி, கறம்பக்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் 1990 – 95 காலகட்டத்தில் 6 ஆழ்துளை எண்ணெய் கிணறுகள் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த போவதாக மத்திய அரசு அறிவித்த போது அப்பகுதி மக்கள் 200 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.அதன் விளைவாக மத்திய, மாநில அரசுகள் ஒருபோதும் மக்களின் அனுமதி இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். அப்போது இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 6 எண்ணெய் கிணறுகளை அகற்றித்தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது. அதன் அடிப்படையில் வானக்கண்காடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 9,000 அடி ஆழமுள்ள ஆழ்துளை எண்ணெய் கிணற்றை அகற்றித்தர வேண்டும் என அந்த பகுதி கிராம மக்களும் 3 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தனர்.இந்த நிலையில் இன்று காரைக்காலில் இருந்து ஓஎன்ஜிசி மண்ணியல் வல்லுநர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இந்த வானக்கண்காடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இவர்கள் 4.5 ஏக்கர் அளவிலான நிலத்தை ஆய்வு செய்தனர். இதுகுறித்து அந்த அதிகாரிகள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 ஆழ்துளை எண்ணெய் கிணறுகளும் பயன்பாடற்ற கிணறு என்றும், இந்த கிணற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் படிப்படியாக 6 கிணறுகளும் அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அளவீடு பணி முடித்து மீண்டும் நிலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்….

The post புதுக்கோட்டையில் ஓஎன்ஜிசியின் 4 எண்ணெய் கிணறுகளை மூட ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: