காளையார்கோவில் அருகே பரவசம் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிப்பு

காளையார்கோவில், மார்ச் 28: காளையார்கோவில் அருகே கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சிரமம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கொங்கேஸ்வரர், ஏழுமுக காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 6.35 மணிக்கு ஆறாம் கால யாகபூஜை, கோ பூஜையும், 8.45 மணிக்கு மஹா பூர்ணாகுதி, தீபாராதனையும் நடைபெற்றன.

தொடர்ந்து கடம் புறப்பாடாகி கோபுரங்களுக்கு புனிதநீர் கொண்டு செல்லப்பட்டது. காலை 10 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. அதேநேரத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளித்தனர். இதனால் பக்தர்கள் பரவசமடைந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலரும் செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளருமான சுப.குமரேசன் மற்றும் கொங்கேஸ்வரர் கோயில் டிரஸ்ட், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: