பள்ளியில் விளையாடிய போது ₹10 நாணயத்தை விழுங்கிய சிறுவன்: மருத்துவமனையில் அனுமதி

பொன்னேரி, மார்ச் 26: பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மகன் தனிஷ்குமார் (9), மீஞ்சூர் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் மாலை பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த தனிஷ்குமார், கையில் வைத்திருந்த ₹10 நாணயத்தை வாயில் போட்டு விழுங்கியதால், மயங்கி விழுந்துள்ளான். இதை பார்த்த சக மாணவர்கள், இதுபற்றி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக தனிஷ்குமாரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், மாணவனின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், எக்ஸ்ரே எடுக்கும் ஊழியர் இல்லை. எனவே, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என மருத்துவர் தெரிவித்துள்ளனர். இதனால், செய்வதறியாது தவித்த பெற்றோர் பொன்னேரியில் உள்ள தனியார் சென்டரில் ₹1500 செலுத்தி, எக்ஸ்ரே எடுத்து, அதனை கொண்டு வந்து, அரசு மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். அதில், மாணவன் வயிற்று பகுதியில் ₹10 நாணயம் இருப்பது தெரிய வந்தது. அப்போது, வயிற்றினுள் சென்ற நாணயம், மலம் வழியாக வெளியேறிவிடும், என மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர் தங்கள் மகனை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.

பயன்படாத எக்ஸ்ரே கருவி

மாணவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ‘பொன்னேரியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவசர மருத்துவ தேவைக்கு வரும்போது இங்கு போதிய மருத்துவர்கள் இருப்பது இல்லை. எக்ஸ்ரே, ஸ்கேன் வசதி இருந்தும் ஊழியர்கள் இல்லாததால், நோயாளிகள், தனியார் சென்டருக்கு சென்று, எக்ஸ்ரே எடுத்து வரும் அவல நிலை உள்ளது. மேலும், ரத்த வங்கி செயல்படாமல் மூடியே உள்ளது. உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சை பெற இந்த அரசு மருத்துவமனைக்கு வரும்போது உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் போகும் வழியிலேயே உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: