தாராபுரத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நீதிபதி துவக்கி வைத்தார்

தாராபுரம்: தாராபுரத்தில் புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நீதிபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.  மனித சமுதாயத்தை சீர்குலைக்கும் நச்சு பொருட்களாக புகையிலையும் போதை பொருட்களும் இருந்து வருகிறது. இப்பழக்கம் அதிக அளவில் இளைய சமுதாயத்தினரை பாதித்து வருகிறது. இதையடுத்து இளைய சமுதாயத்தினரை பாதுகாக்கவும் பொது மக்களுக்கு போதை மற்றும் புகையிலை பொருட்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தாராபுரம் சட்டப்பணிகள் குழு, அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.தாராபுரம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பத்மாவதி அனைவரையும் வரவேற்று பேசினார். இதைதொடர்ந்து ஐந்து சாலை சந்திப்பு அருகில் இருந்து பூங்கா சாலை வழியாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை பேரணி அடைந்தது.இந்நிகழ்ச்சியில், தாராபுரம் 3வது கூடுதல் மாவட்ட நீதிபதி நாகராஜன், குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் ஜெகஜோதி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராசு, ஆய்வாளர் மணிகண்டன், அரசு வழக்கறிஞர் சங்க தலைவர் கலைச்செழியன், வழக்கறிஞர்கள் ஏவிஹெச் ரஹமத்துல்லா, எம்.ராஜேந்திரன், வாரண வாசை, மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: