திண்டிவனம், மார்ச் 23: திண்டிவனத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் தொந்தரவால் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுந்தரமவுலி தெருவை சேர்ந்தவர் சடகோபன்(46). இவர், தனது நண்பரான திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுந்தரம்(45) என்பவருக்கு கடந்த 2012ல் கார் வாங்குவதற்காக, 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார். 2017 வரை தவனை கட்டியதாக தெரிகிறது. மேலும் மீதமுள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வட்டியும், அசலும் சேர்த்து 2023 வரை சுமார் 10 லட்சம் ரூபாய் கட்ட சொல்லி தனியார் பைனான்ஸ் நிறுவனம், சடகோபனுக்கு நோட்டீஸ் அனுப்பி வந்துள்ளது. மேலும் சடகோபன் அதே பைனான்ஸ் நிறுவனத்தில் இரண்டு கார்கள் வாங்கி, தவனை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் என்.ஓ.சி தராமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சடகோபன் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் பக்கத்தில் உள்ள மற்றொரு பாழடைந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர். தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.