புதுச்சேரி, மார்ச் 22: புதுச்சேரி, கோரிமேடு பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மப்டி உடையில் ரகசியமாக நேற்று கண்காணித்தனர். அப்போது 45 அடி ரோடு சந்திப்பில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்டு அருகே சந்தேகத்துக்கிடமான 3 பேர் நிற்பதை கண்ட போலீசார் அவர்களை சுற்றிவளைத்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே 3 பேரையும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது 2 பாலிதீன் பைகளில் 1 கிலோ 365 கிராம் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவையும், அவர்களிடமிருந்த 3 செல்போன்கள், பைக்கை அதிரடியாக பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து அதிரடியாக விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், சாரம் வெண்ணிலா நகர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வசந்த் (19), புதுசாரம், 3வது குறுக்குத் தெரு சைலாஷ் (19), திலகர் நகர், 2வது குறுக்குத் தெரு ராம் (19) என்பதும், கல்லூரி மாணவர்களான 3 பேரும் தங்களது கை செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்பனை செய்ததும் அம்பலமானது. அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.