மனு அளிக்க வரும் மக்கள்நலன் கருதி கலெக்டர் அலுவலகத்தில் கோடைபந்தல் அமைப்பு

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கோடை வெயிலை சமாளிக்க மனு அளிக்க வரும் பொதுமக்கள் நிழலில் நின்று செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை மூன்று மாதங்களுக்கு தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும். இந்நிலையில், மற்ற மாவட்டங்களை விட கரூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே உள்ளது. மேலும், கடந்த 15 நாட்களாக கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நாட்களில் மனு கொடுக்க வரும் மக்கள், மனுவினை பதிவு செய்த பிறகு, கலெக்டர் அலுவலகத்தில் வலதுபுறம் உள்ள பாதையின் வழியாக வரிசையாக சென்று, பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று மக்கள் வரிசையாக நின்று செல்லும் பகுதியில், வெயில் தாக்காத வகையில், மக்கள் வரிசையாக நின்று செல்லும் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள், பந்தல்நிழலில் நின்று நேற்று மனு கொடுத்துச் சென்றனர்.

இதனால், அனைத்து தரப்பினர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மனு கொடுக்க வரும் மக்கள் நலன்கருதி, மனுக்கள் பதிவு செய்யும் வளாகத்தில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று வழங்கப்பட்ட நீர்மோரை, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி பருகிச் சென்றனர்.

Related Stories: