இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாதிரியார் கைது சிறையில் அடைப்பு

நாகர்கோவில், மார்ச் 21:  குமரியில் இளம்பெண்களுடன் பழகி வாட்ஸ் அப் சாட்டிங் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்த பாதிரியார் நேற்று கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் குடயால்விளையை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர், அழகியமண்டபம் அருகே உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்தார். அதற்கு முன், பேச்சிப்பாறை அருகே உள்ள தேவாலயத்தில், பயிற்சி பாதிரியாராக பணியாற்றினார். இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோக்கள், பாலியல் ரீதியான ஆபாச சாட்டிங் போன்றவை சமூக வலை தளங்களில் பரவியது. இதனால் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார்.

இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சாட்டிங் செய்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தன்னை தொல்லை செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பாதிரியார் மீது, சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த பாதிரியாரை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பாதிரியாரை தேடி வந்தனர். இதற்கிடையே பாதிரியார் லேப் டாப் போலீஸ் வசம் சிக்கியது. இதில் 80க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இருந்தன. இதை பார்த்து போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, நீதிமன்றத்தில் சரண் அடைவார் என்று தகவல் பரவிய நிலையில் நேற்று முன் தினம் இரவு, நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விடிய, விடிய விசாரணை நடந்தது. பின்னர் நேற்று காலையில், நாகர்கோவிலில் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து வந்தனர். ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப் இன்ஸ்பெக்டர் அஜ்மல் தலைமையிலான போலீசார் பாதிரியாரிடம் வாக்குமூலம் பெற்றனர்.

முதலில் போலீசாரிடம் எதுவும் பேச மறுத்த பாதிரியார், பின்னர் தான் எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்தி, மிரட்டி சித்ரவதை செய்ய வில்லை என தெரிவித்தார். வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் நான் வெளியிடவில்லை என கூறினார். இளம்பெண்களை நிர்வாணமாக வீடியோ பதிவு செய்தது ஏன்? என கேட்ட போது, எந்த பதிலும் கூற வில்லை. சம்பந்தப்பட்ட இளம்பெண்களுக்கு வீடியோ எடுப்பது தெரியுமா? என போலீசார் கேட்ட போது, அவர்களுக்கு தெரியாமல், அவர்கள் விரும்பாமல் எதையும் நான் செய்ததில்லை என கூறி உள்ளார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணைக்கு பின், நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் பாதிரியாரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.  போலீஸ் வேனில் இருந்து இறங்கியவர் முகத்தை மூடியபடி சென்றார். மாஸ்க் அணிந்திருந்தார். மருத்துவ பரிசோதனை முடிந்து நாகர்கோவில் மாஜிஸ்திரேட் வீட்டில்ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் தாயுமானவர் அவரை 4ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

சிம்கார்டுகள், செல்போன்களை அடிக்கடி மாற்றிய பாதிரியார்

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவாக இருந்த கால கட்டங்களில் 3 செல்போன்களை பயன்படுத்தி உள்ளார். மொத்தம் 11 சிம்கார்டுகளையும் பயன்படுத்தி இருக்கிறார். இதில் கர்நாடகா, கேரளாவில் வாங்கப்பட்ட சிம்கார்டுகள் தான் அதிகம் ஆகும். போலீசாரை திசை திருப்பும் வகையில் அடிக்கடி சிம்கார்டுகளையும், செல்போன்களையும் மாற்றி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

பத்திரிகையாளர்களுக்கு தடை

நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வைத்து தான் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் விசாரணை நடந்தது. இதையடுத்து நேற்று எஸ்.பி. அலுவலகத்தில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மனு அளிக்க வந்தவர்கள் உரிய சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்கள் விசாரணை நடந்து வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு சென்று விடக்கூடாது என்பதால், எஸ்.பி. அலுவலக வளாகத்துக்குள்ளேயே நேற்று காலை பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட வில்லை. இதனால் பத்திரிகையாளர்கள் வாக்குவாதம் செய்தனர். அதன் பின்னர் தான் வளாகத்துக்குள் பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்களை போலீசார் அனுமதித்தனர்.

மேலும் 4 பெண்கள் புகார்

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது தற்போது குமரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தான் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் மீது சென்னை, மற்றும் பெங்களூரூவை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் உட்பட மொத்தம் 4 பேர் புதிதாக புகார் அளித்துள்ளனர் . இந்த புகார்களின் அடிப்படையிலும் பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தால் அவர்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாதிரியாரின் லீலைகள் வெளியானது எப்படி?

பாதிரியார் மீது குமரி மாவட்டம் காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டு விளையைச் சேர்ந்த மினி அஜிதா (40) என்பவர் தான் முதலில் புகார் அளித்திருந்தார். இவர் தனது புகாரில் பாதிரியாரின் லீலைகளை குறிப்பிட்டு இருந்தவுடன் தனது மகன் ,  பாதிரியாரை தட்டி கேட்டதால் பொய் புகார் அளித்து சிறையில் அடைத்துள்ளனர் . எனவே மகன் மீதான பொய் புகாரை ரத்து செய்து விடுவிக்க வேண்டும். மேலும் பாதிரியார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது சில ஆதாரங்களையும் காவல்துறையிடம் தாக்கல் செய்திருந்தார் .  இவரிடம் ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர் . இந்த நிலையில் தான் பாதிரியாரின் லீலைகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: