கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி

நாகர்கோவில், மார்ச் 21: நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இடத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மணலோடை, வில்லுசாரிமலை பகுதியை சேர்ந்தவர் ரங்கன் காணி மகள் சீதா. இவர் கணவனால் கைவிடப்பட்டவர். இவர் நேற்று காலையில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கட்டிட அரங்கம் அருகே வந்தார். திடீரனெ்று அவர் அங்கு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் அவரை மீட்டனர். அவரது உடலில் தண்ணீர் விட்டு முதலுதவி அளித்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் 3 பக்க கடிதம் ஒன்றை வைத்திருந்தார்.

 அதில், ‘நான் 2010ம் ஆண்டு முதல் இன்று வரை எனது பிரச்னையை சொல்லி வருகிறேன். இன்னும் என்னுடைய பிரச்னைக்கு எந்த ஒரு தீர்வும் வரவில்லை. இப்போதும் வில்லுசாரிமலையை சேர்ந்த சிலர் மீது எல்லா தப்பும் உள்ளது. இவர்கள் செய்த தப்பின் காரணமாக எனது கஷ்டத்தை தாங்க முடியாமல் கலெக்டர் அலுவலகத்திற்கு ஏற்கனவே மண்ணெண்ணெய் எடுத்து வந்தேன். முதல்நாள் மண்ணெண்ணெய் என் உடலில் விட்டேன். அப்போது என்னை சாகவிடவில்லை. இன்னொருள் எனது கையில் இருந்து மண்ணெண்ணெய் எடுத்துவிட்டு உனது கோரிக்கை நிறைவேறும் என்று கூறினர். வில்லுசாரிமலை பகுதியை சேர்ந்த சிலர் என்னை வாழ விடாமல் அழித்துக்கொண்டு இருக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். ஏற்கனவே 2 முறை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் எடுத்து வந்து தற்கொலைக்கு முயன்றதாகவும், தற்போது மூன்றாவது முறையாக வந்துள்ளதாகவும் கூறியிருந்தார். பின்னர் சீதாவை மீட்டு 108 ஆம்புலன்சில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: