குளச்சல் அருகே மோசடி நிதி நிறுவனத்தில் கம்ப்யூட்டர், ஆவணங்களை விசாரணைக்கு எடுத்து சென்ற குற்றப்பிரிவு போலீசார்

குளச்சல், மார்ச் 21 : குளச்சல் அருகே உடையார்விளை மோசடி நிதி நிறுவனத்திலிருந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் உடையார்விளை, வேர்கிளம்பி, களியல், அழகியமண்டபம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டு, வேலைக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் தலைமை அலுவலகம் கரூர் என விளம்பர பலகையில் குறிப்பிடப்பட்டது. இந்த கிளைகளில் வேலைக்கு சேர்ந்த  பணியாளர்கள் மூலம் தனி நபர் கடன், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பல்வேறு கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதை நம்பி கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் தொகைக்கு ஏற்ப ₹25 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரை செலுத்தினர். 4 கிளைகளிலும் சுமார் 3 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்களாக சேர்ந்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு கடன் வழங்கும் விழா கடந்த 14ம் தேதி அழகியமண்டபம் பகுதியில் நடக்கும் என அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. கடன் கேட்டு முன் பணம் செலுத்தியவர்களுக்கு, அவரவர் வங்கி கணக்கில் ₹100 சேலுத்தி ஒத்திகையும் நடத்தினர். இதனால் பணம் செலுத்தியவர்கள் கடன் தொகை கிடைக்கும் என நம்பினர். இந்நிலையில் நிதி நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்து பணியாளர்கள் சேர்ப்பு, உறுப்பினர்கள் சேர்ப்பை நடத்தியவர்கள் 13ம் தேதியே மாயமானார்கள். அவர்களின் செல்போன்கள் சுவிச் ஆப் செய்யப்பட்டது. இதனால் பணிக்கு சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில்  மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிதி நிறுவன இயக்குனர்கள் என கூறிய தூத்துக்குடியை சேர்ந்த சியாம் ஜோஸ்வா, துர்கா தேவி, சிவகங்கையை சேர்ந்த வேணுகோபால், திருநெல்வேலியை சேர்ந்த அல்தாப், கும்பகோணத்தை சேர்ந்த சந்தோஷ், பாளையங்கோட்டையை சேர்ந்த ஜமால் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களின் முழு முகவரி மற்றும் அடையாளங்கள் யாருக்கும் தெரியவில்லை. இவர்களின் புகைப்படங்கள் முலம் இவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா தலைமையில் போலீசார் நேற்று குளச்சல் அருகே உடையார்விளை மோசடி நிதி நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது நிறுவனம் பூட்டிக்கிடந்தது. போலீசார் நிறுவன அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து கொடுத்த அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் அலுவலக சாவி உள்ளது என்பதை அறிந்து கொண்டனர். இதைடுத்து அவரது உதவியுடன் அலுவலகம் திறக்கப்பட்டது. உள்ளே சென்ற போலீசார் அலுவலகத்தின் உள்ளே இருந்த கம்பியூட்டர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட கணக்கு சம்பந்தமான நோட்டு புத்தகங்கள் மற்றும் ஆவணங்களையும் விசாரணைக்காக எடுத்து சென்றனர்.

இது போல் மற்ற 3 கிளைகளில் உள்ள ஆவணங்களையும் குற்றப்பிரிவு போலீசார் எடுத்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். உடையார்விளை கிளை அலுவலகத்தை  குற்றப்பிரிவு போலீசார் திறந்து ஆவணங்களை பார்க்கும்போது பணம் செலுத்தி ஏமாந்த பொதுமக்கள் சிலர் சோகத்துடன் அங்கு கூடினர். குற்றப்பிரிவு போலீசார் ஆவணங்களை எடுத்து சென்றதும் அவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா கூறியதாவது: இது போன்ற போலி நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் ஏமாறக்கூடாது. கவர்ச்சி திட்டங்கள், போலி அறிவிப்புகள் குறித்து தீவிரமாக விசாரித்த பின்பே பொதுமக்கள் அதில் சேர வேண்டும். இந்த மோசடி நிதி நிறுவனங்களை தொடங்கியவர்கள் தலைமறைவாகி நிறுவனங்கள் பூட்டப்பட்ட பின்பும் களியல் கிளையில் மூதாட்டி ஒருவர் பணம் செலுத்த வந்துள்ளார். அவருக்கு நாங்கள் உண்மையை புரிய வைத்து அவரை திருப்பி அனுப்பி வைத்தோம். மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்றார்.

Related Stories: