கிருஷ்ணகிரி, மார்ச் 21: கிருஷ்ணகிரியில் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தலைமையில் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலர், ஆணையர் (நிலச் சீர்த்திருத்தம்) டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பேசுகையில், மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுரம் வீடுகள் புனரமைப்பு பணிகள், 15வது நிதிக்குழு திட்டப்பணிகள், வருவாய் துறை சார்பில் பட்டா வழங்க கோரி நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளி கட்டிடங்கள் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட அரசு துறை வாரியாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.