தமிழக பட்ஜெட் அனைத்துத்துறை வளர்ச்சிக்கானது

ஓசூர், மார்ச் 21:தமிழக பட்ஜெட் ேநற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஓசூரில் சிறுகுறு தொழில் சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழக பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்தனர். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வேல்முருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் தொலைநோக்கான அனைத்துத்துறை வளர்ச்சிக்கான பட்ஜெட் என ஓசூர் சிறுகுறு தொழிற்சங்கம் கருதுகிறது. தொழில்துறை மற்றும் சிறுகுறு, நடுத்தர தொழில் துறைகளுக்கு தேவையான பல எண்ணற்ற திட்டங்களை இந்த பட்ஜெட்டில் தமிழக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த பட்ஜெட் அறிக்கையில் சுமார் ₹1,509 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டை விட சுமார் ₹600 கோடி அதிகமான நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

இந்த நிதியின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு மூலதன மானியம் 40 சதவீதம் வரையும், 6 சதவீத வட்டி மானியம் போன்ற சலுகைகள் வழங்கப்பட உள்ளது.மேலும் தொழில்துறைக்கு ₹3,268 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு மூலம் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2 முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே உள்ள சூளகிரி மூன்றாவது தொழில் பூங்காவில் ₹80 கோடியில் தொழில் திறன் பயிற்சி மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறுகுறு மற்றும் நடுத்தர, பெரிய நிறுவனங்கள் திறன் மிகுந்த வேலை ஆட்களை பெற மிகப்பெரிய உதவியாக இந்த திட்டம் இருக்கும் என நம்புகிறோம். தமிழக நிதியமைச்சர் தமிழ்நாட்டில் ஓசூர் மூன்றாவது பெரிய தொழில் நகரம் என்ற அளவில் முக்கியத்துவம் கொடுத்து ஓசூருக்கு தேவையான நிறைய திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு இண்டஸ்ட்ரி 4.0 தொழில்நுட்பத்தை புகுத்தி வளர்ச்சி மற்றும் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் பல சென்டர் ஆப் எக்ஸலண்ட் தமிழ்நாட்டில் உருவாக்க அறிவித்துள்ளார். ஓசூரிலும் ஒரு திட்டம் உருவாக உள்ளது. எனவே சிறப்பான இந்த தமிழக பட்ஜெட்டை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: