4 திருநங்கைகளுக்கு ஓய்வூதிய ஆணை

தூத்துக்குடி, மார்ச் 21: தூத்துக்குடியில் 4 திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 420 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் ஆதரவற்ற 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 4 திருநங்கைகளுக்கு ₹1000 உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். முன்னதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து தொழிற்கடனுதவி, இலவச வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பயிர் காப்பீட்டு திட்டம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 20 கோரிக்கை மனுக்களைப் பெற்று கொண்டு, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து வளாகத்தில் அமர்ந்திருந்த முதியோர்களிடமும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி சப்-கலெக்டர் கவுரவ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: