திருப்பூரில் சட்ட விரோதமாக வங்கதேசத்தினர் தங்கியுள்ளனரா?..போலீசார் தேடும் பணி தீவிரம்

திருப்பூர், மார்ச் 19:திருப்பூரில் முறைகேடாக வங்கதேசத்தினர் தங்கியுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர்  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் தமிழக தொழிலாளர்களை போலவே லட்சக்கணக்கில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்யும் சில இடங்களில், வங்கதேச நாட்டை சேர்ந்த சிலர் தங்கி பல ஆண்டுகளாக பணி செய்து வந்தது கடந்த காலத்தில் திருப்பூரில் நிகழ்ந்துள்ளன.

 அதேபோல் தற்போது மேற்கு வங்க மாநிலத்தினர் பணிபுரியும் இடங்களில் சந்தேகத்துக்கு இடம் தரும் வகையில் உள்ள நபர்களை கண்காணித்து அவர்களது ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்களும், வங்கதேச நாட்டை சேர்ந்தவர்களும் நிலத்தின் அடிப்படையில் அருகருகே இருப்பதால், அவர்களது முகத்தோற்றம் மற்றும் மொழி உள்ளிட்டவைகளில் பெரிதாக மாற்றம் இருக்காது. இதனால் போலீசார் கண்டறிவதில் குழப்பம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் திருப்பூரில் நைஜீரியர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டது போல், சட்ட விரோதமாக வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் சிலர் தங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. அதன் அடிப்படையில் மத்திய உளவுத்துறை போலீசார் தற்போது வங்கதேசத்தினர் குறித்து விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாநகர போலீசார் வங்கதேசத்தினர் தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த சோதனை ஒரு கட்டத்துக்கு மேல் நகரவில்லை. இந்த நிலையில் மத்திய உளவுத்துறை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: