கும்பகோணத்தில் காவலர் நல சிறப்பு மருத்துவ முகாம்

கும்பகோணம், மார்ச்19:கும்பகோணம் சரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத்தினருக்கான காவலர் நல சிறப்பு மருத்துவ முகாம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமிற்கு டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு எலும்பியல் முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் டிஎஸ்பி மகேஷ்குமார் பேசுகையில்,போலீஸ் பணி என்பது சவாலான பணியாகும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்நேரமும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டிய அவசியம் போலீசாருக்கு உள்ளது.போலீசாருக்கு தங்களது குடும்பம் கண் போன்றது.

எனவே தங்களது குடும்ப நலனுக்காக போலீசார் அனைவரும் தங்களது உடல் நலத்தை பாதுகாப்பாக பேண வேண்டியது அவசியமாகும். போலீசார் அனைவரும் சூழ்நிலைகளை எளிதாக கையாள கற்றுக்கொண்டு மனதையும் இலகுவாக வைத்துக் கொள்ள பழக வேண்டும். சூழ்நிலைகளால் ஏற்படும் மன இறுக்கத்திலிருந்து விடுபட்டு மனதை அமைதிப்படுத்தி உடலை வலிமைப்படுத்த போலீசார் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். போலீசாரின் உடல் நலத்திற்காக இதுபோன்ற மருத்துவ முகாம்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை போலீசார் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தங்களது உடலையும், மனதையும் பாதுகாப்பாக வைத்து பொதுமக்களுக்கு தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்றார்.

முகாமில் கும்பகோணம் சரகத்திற்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: