நோய் தாக்குதல் ஏற்பட்ட மாந்தோப்பில் அதிகாரிகள் ஆய்வு

உடுமலை, மார்ச் 18: உடுமலை ஜல்லிக்கட்டு பகுதியில் நோய் தாக்குதல் ஏற்பட்ட மாந்தோப்பில் வேளாண் பல்கலை. அதிகாரிகள் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மை குறித்து அறிவுறுத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தென்னை, கரும்பு, மக்காச்சோளம் சாகுபடிக்கு அடுத்தபடியாக அதிகளவு மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஜல்லிப்பட்டி, தளி, வாளவாடி, மானுப்பட்டி, சின்னக்குமாரபாளையம், கொழுமம், கொங்கரார்குட்டை உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்துள்ளனர்.மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாமரத்தில் பூ பிடித்து காய்க்க துவங்கும். இந்த ஆண்டு பூ பிடித்த நிலையில், நோய் தாக்குதல் காரணமாக பூக்கள் உதிர்ந்து வருகின்றன.

இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து கடந்த 13ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று கோவை வேளாண் பல்கலை. பழங்கள் மேலாண்மை துறை அதிகாரிகள் சிவகுமார், வனிதா ஆகியோர் ஜல்லிப்பட்டி சென்று மாந்தோப்பில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,“மா மரங்களில் கரும்படல நோய் மா தத்துப்பூச்சிகளால் ஏற்பட்டுள்ளது. மா மரங்களில் கருப்புநிற இலைப் பேன் பரவலாக காணப்படுகிறது. பூச்சி மேலாண்மையை முறையாக செய்யும்போது மாமரத்தில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த முடியும். பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories: