நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும்

திருப்பூர், மார்ச் 18: திருப்பூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக சீர்மிகு சிறுதானிய பெருவிழா நடந்தது. இதன் ஒரு பகுதியாக ‘உன் நலம், மண் நலம்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம், கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. கல்லூரி பேராசிரியை உஷா வரவேற்றார். கல்லூரி செயலாளர் குழந்தை தெரஸ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மேரி ஜோஸ்பின் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் சிறுதானிய உற்பத்தி செய்ய வேண்டும் என்று வேளாண் துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மனிதன் உயர் வாழ்வதற்கு உணவு மிக முக்கியம். அந்த உணவு சத்துள்ள உணவாக இருக்க வேண்டும்.

எனவே, அந்த வகையில் சிறுதானியங்கள் மனிதனுக்கு ஊட்டச்சத்து தரக்கூடியது. சிறு தானியங்களை விளைவிக்கக் கூடிய ஒரு விவசாயி மகன் நான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

கலைஞர் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார். அதனால்தான் 98 ஆண்டு காலம் வாழ்ந்தார். அதுவே அவருடைய ஆரோக்கியத்துக்கு காரணமாக அமைந்தது. அதேபோல் எனது தாத்தா 102 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்தார். எனது தந்தை 96 வயதை எட்டிக் கொண்டிருக்கிறார். அவர்கள் விவசாயம் செய்து, உணவு விஷயத்தில் ஊட்டச்சத்துள்ள சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டதே காரணம். கம்பு, சோளம், சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். இதனை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். நீங்கள் கட்டாயம் சிறுதானிய உணவுகளை எடுத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

பெண்கள் ஆரோக்கியமாக இருநதால், ஒரு குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். இது ஒரு அற்புதமான நிகழ்ச்சி, இதுதொடர்பான விழிப்புணர்வு அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலும் உணவு முறையால்தான் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. ஆகவே, சரியான உணவு வகைகளை நாம் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: ஒவ்வொரு மனிதவுக்கும் உணவு, உடை, இருப்பிடம் முக்கியம். அரசு சார்பில், பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறது. இதில், சிறுதானிய உணவுகளும் வழங்கப்படுகிறது. ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொருவரும் ஒரு நேரமாவது சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். பழைய உணவு முறைக்கு நாம் திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை ஆரோக்கிய ஹெல்த் கேர் நிர்வாக இயக்குனர் மருத்துவர் சிவராமன் கலந்து கொண்டு பேசியதாவது: சிறு, சிறு தானியங்கள் நூறு பேர்களின் பசியாற்றும், அதேபோல் ஆயிரம் பறவைகளின் பசியையும் போக்கும். சிறுதானியங்கள் தற்போது கண்காட்சி பொருளாக மாறிவிட்டது. அடுத்த பத்து ஆண்டுகளில் நமது வாழ்வில் இது ஒரு அன்றாட பொருளாக மாற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழா கொண்டாடப்படுகிறது. நாளுக்கு நாள் புதிய புற்று நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போக்கிறது. இதற்கு தற்போதைய உணவு முறைதான் காரணம். 15 சதவீதம் பேருக்கு மட்டும்தான் மரபு ரீதியாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. 85 சதவீதம் உணவு முறையால் பாதிப்பு ஏற்படுகிறது. நம் மண், நமது விவசாயி, நம்முடைய நிலம் என்கிற புரிதல் நமக்கு வர வேண்டும். 67 சதவீதம் பேர் சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் உள்ளவர்கள் உள்ளனர்.

சிறு வயதில் சர்க்கரை வரக்கூடாது என நாம் நினைக்க வேண்டும். தமிழ்நாட்டில்  கிட்டதட்ட 90 லட்சம் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். 10 சதவீதம் நேர் மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பரிசுகளை வழங்கினார். சிறுதானிய உணவு  கண்காட்சி அரங்குளை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர்  தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார்,  மண்டலத் தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தசாமி, மருத்துவர் ஜி.சிவராமன்,  திமுக தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

Related Stories: