வேலாயுதம்பாளையம் அருகே விபத்து டேங்கர் லாரி மீது கார் மோதல் தாய், மகள் பரிதாப பலி

வேலாயுதம்பாளையம், மார்ச்.18:வேலாயுதம்பாளையம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதியதில் தாய், மகள் பலியாயினர். கரூர் தெற்கு மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன்(53). இவர் ஆடிட்டராக உள்ளார். முத்துராமன் தனது இளைய மகள் ஹரித்தியாவை சேலம் அன்னபூர்ணா மெடிக்கல் கல்லூரிக்கு கூட்டிச் சென்று விட்டு விட்டு வருவதற்காக தனது மனைவி பானுப்பிரியா(49), மூத்த மகள் பூர்ணிமா(23), இளைய மகள் ஹரித்யா(21) ஆகியோருடன் காரில் புறப்பட்டு கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரை முத்துராமன் ஒட்டி வந்தார். கார் மூலியமங்கலம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற டேங்கர் லாரி திடீரென பிரேக் போட்டு சிக்னல் செய்யாமல் லாரியை நிறுத்தியதால் பின்னால் வந்த முத்துராமன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் மோதியதில் காரை ஓட்டி வந்த முத்துராமன், காரில் அமர்ந்திருந்த அவரது மனைவி பானுப்பிரியா, அவரது மூத்த மகள் பூர்ணிமா ,இளைய மகள் ஹரித்யா ஆகியோருக்கு தலை மற்றும் முகம் பகுதியில் பலத்தகாயம் ஏற்பட்டது.

இதில் பானுப்பிரியாவுக்கும் ,அவரது மகள் பூர்ணிமாவுக்கும் மிகப் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் நான்கு பேரையும் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பானுப்பிரியாவையும் அவரது மூத்த மகள் பூர்ணிமாவையும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பானுப்பிரியா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து பூர்ணிமாவை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருப்பினும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து முத்துராமன் கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து லாரியை ஒட்டி வந்து சிக்னல் செய்யாமல் நிறுத்தி விபத்து ஏற்படுத்தி லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவாக உள்ள லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: