மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி

கிருஷ்ணகிரி, மார்ச் 18: கிருஷ்ணகிரியில், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும், தொடர் சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவும், மாவட்ட அளவில் கிருஷ்ணகிரி ராயப்பா முதலி தெருவில் உள்ள சாந்தி திருமண மண்டபத்தில், வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது. இதில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களான மென் பொம்மைகள், டெரகோட்டா பொம்மைகள், மண்பாண்ட பொருட்கள், புளி, ஊறுகாய், பாக்கு மட்டை தட்டுகள், பாசிமணி, புடவைகள், காட்டன் சுடிதார்ஸ், அலங்கார மலர் மாலைகள், நவநாகரீக அணிகலன்கள், தின்பண்டங்கள், பனை வெல்லம், ஹேண்ட் பேக்குகள், கிப்ட் பொருட்கள், நர்சரி பூ செடிகள், சிறுதானிய உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு, பொருட்களை வாங்கி பயனடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: