பதப்படுத்திய காராமணி விற்பனை அமோகம்

போச்சம்பள்ளி, மார்ச் 18: போச்சம்பள்ளி பகுதியில் செம்மண் பூசி பதப்படுத்தப்பட்ட காராமணி விற்பனை அமோகமாக உள்ளது. இதன்மூலம் கூடுதல் வருவாய் கிடைப்பதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனஹள்ளி, பர்கூர், போச்சம்பள்ளி, மத்தூர், கல்லாவி, சாமல்பட்டி, பண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஹெக்டேரில் கொள்ளு, 60 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து, காரமணி, பச்சை பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். போச்சம்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாந்தோட்டங்களில் ஊடுபயிராகவும், மானாவாரியாகவும் பயறு  வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு பெய்த மழையால் மகசூல் அதிகரித்தது. ஒரு கிலோ காராமணி கிலோ ₹65 முதல் ₹70 வரை விற்பனையானது.

சிறுதானிய பயன்பாடு மீதான விழிப்புணர்வு அதிகரிப்பால், இந்தாண்டு கிலோ ₹90 வரை விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் நேரில் சென்று துவரையை மொத்தமாக கொள்முதல் செய்யும் பெண்கள், செம்மண் கலவையிலிட்டு காய வைத்து பதப்படுத்தி, அதனை உடைத்து பருப்பாக்கி கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். கிலோ ₹150 வரை விற்பனை செய்யப்படுவதால் நல்ல வருவாய் கிடைக்கிறது. இதை பெண்கள் குடிசை தொழிலாக செய்து வருகிறார்கள். செம்மண் கட்டிய பருப்பு வகைகள் மிகுந்த ருசி கொண்டதாகவும், நீண்ட நாட்களுக்கு வண்டு மற்றும் பூச்சிகள் தாக்காமலும் உள்ளது. இதனால், விற்பனை அதிகரித்து, நல்ல வருவாய் கிடைத்து வருவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: