வங்கி வாசலில் முதியவரிடமிருந்து ₹2.30 லட்சம் பணம் பறிப்பு

திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 17: திருவெண்ணெய்நல்லூரில் வங்கியில் நகைகளை அடகு வைத்த முதியவரிடமிருந்து  ரூ.2.30 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரஹீம் (61). இவர் தனது குடும்ப தேவைக்காக நேற்று திருவெண்ணெய்நல்லூரில் உள்ள இந்தியன் வங்கியில் தனது 8 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து ரூ.2.30 லட்சம் பணத்தை ஒரு பையில் வைத்து வங்கியின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த தனது மொபட்டின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வாகனத்தை ஓட்ட துவங்கும் நேரத்தில், தனது வங்கி கணக்கு புத்தகம் வங்கியின் உள்ளே வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்துள்ளது.

உடனே மொபட்டை அப்படியே நிறுத்திவிட்டு வங்கியினுள் சென்று வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டுக்கு சென்று மொபட்டின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக பெட்டியை திறந்து பார்த்த போது அதிலிருந்த பணப்பையை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.  இதுகுறித்து அப்துல்ரஹீம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: