ஏனாமில் அரிசி மூட்டை கடத்திய வழக்கில் டிரைவர் கைது ₹4.60 லட்சம் பறிமுதல்

புதுச்சேரி, மார்ச் 17:  புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியம், அதிவிபோளம் பகுதியைச் சேர்ந்தவர் துர்கா பிரசாத் சவுத்ரி (50). இவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் ஆலை வைத்துள்ளார். இவரிடம் கேரள மாநிலம் செங்கனூர், கொல்லம் பகுதிகளைச் சேர்ந்த அரிசி வணிக நிறுவனங்கள் மொத்தமாக அரிசி பைகள் வாங்க அணுகிய நிலையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடா தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவன லாரியில் 560 அரிசி பைகளை (தலா 50 கிலோ/ மொத்தம் 28 டன்) கடந்த பிப். 2ம்தேதி துர்கா பிரசாத் சவுத்ரி அரிசி ஆலையில் இருந்து ஏற்றி கேரளா மாநிலத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மொத்தம் ரூ.13.07 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கண்ட வணிக நிறுவனங்களுக்கு சென்று அரிசியை இறக்குமதி செய்யாததால் துர்க்கா பிரசாத் சவுத்ரி அதிர்ச்சியடைந்தார்.

லாரியுடன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று துர்கா பிரசாத் சவுத்ரி ஏனாம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் லாரி உரிமையாளர், ஆத்தூர் லாரி டிரைவர் சதீஷ்குமார் ஆகியோர் மீது 420 (மோசடி) உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் லாரி உரிமையாளர் அறிவுறுத்தலின்பேரில் ஓட்டுனர் பெருந்துறை பகுதியில் அரிசியை விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்ய ஏனாம் எஸ்பி ரகுநாயகம் அதிரடியாக உத்தரவிட்டார். எஸ்ஐ நாகராஜு தலைமையிலான தனிப்படையினர் சேலம் மற்றும் கோவை பகுதிக்கு விரைந்து தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி லாரியை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர் ராஜகாளை மற்றும் பாபு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுசம்பந்தமாக ஆத்தூர் செல்லியாம்பாளையம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்குமார் என்கிற ஹிப்ஸ் என்பவரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து அரிசி விற்பனை செய்த பணம் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம், 5 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: