4 ஆண்டுகளில் 28,114 பேருக்கு பாஸ்போர்ட்

கிருஷ்ணகிரி, மார்ச் 16: கிருஷ்ணகிரி தபால் நிலைய சேவை மூலம், 4 ஆண்டுகளில் 28,114 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியிலும், நவீனத்திலும் நாடு முன்னேறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், வெளிநாடுகளில் சென்று பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. படித்த இளைஞர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்களும் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்ற பெருமளவில் ஆர்வம் காட்டி வருன்றனர். சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்குரிய முக்கிய ஆவணமாக பாஸ்போர்ட் உள்ளது. பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர், பாஸ்போர்ட்டை பெறுவது பொதுமக்களுக்கு சற்று சிரமமாகவே இருந்து வந்தது. இதை எளிமைப்படுத்தும் வகையில், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், பாஸ்போர்ட் வழங்கும் பணியை, தபால் நிலைய சேவை மையங்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது. முக்கிய நகரங்களில் செயல்படும் தபால் நிலையங்களில் “போஸ்ட் ஆபிஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திரா” மையங்களை ஏற்படுத்தி இச்சேவையை வழங்கி வருகிறது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், ராசிபுரம், ஈரோடு, குன்னூர், கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இச்சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மேற்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் இயங்கும் கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலைய பாஸ்போர்ட் மையத்தில், தினமும் 50 முதல் 60 பேருக்கு நேர்காணல் நடத்தி, பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மையத்தில், பாஸ்போர்ட் கேட்டு அதிக அளவில் மக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த மையம் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி துவங்கப்பட்டது. துவங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இந்த மையத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 28,114 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்.

ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவுடன், நேர்காணலுக்கான தேதி, விண்ணப்பதாரருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. பின்னர், அந்த தேதியில், இருப்பிடத்திற்கான ஆதாரமாக ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வயது தொடர்பான சான்றுக்காக 10 அல்லது 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்யவேண்டும். இந்த நேர்காணல் முடிந்ததும், கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களின் முழு தகவல்களும் அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்த 15 நாட்களுக்குள் காவல்துறை விசாரணையை முடித்து, பாஸ்போர்ட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

இது குறித்து, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் மற்றும் தலைமை தபால் நிலைய அலுவலர் ராமசாமி ஆகியோர் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையத்தில் இச்சேவை மையம் தொடங்கிய பிறகு கல்லூரி மாணவ, மாணவிகள், படித்த இளைஞர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்து, முறைப்படி பெற்று வருகின்றனர். மேற்கு மண்டலத்தில் ஈரோடு, ராசிபுரம், சேலம், குன்னூர் உள்ளிட்ட பல்வேறு தபால் நிலையங்களில் இச்சேவை வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், கிருஷ்ணகிரி மையத்தில் 28,114 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர். தினமும் 50 முதல் 60 பேருக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,’ என்றனர்.

Related Stories: