கொட்டை புளி விலை அதிகரிப்பு

ராயக்கோட்டை, மார்ச் 16:ராயக்கோட்டைக்கு வரத்து குறைவால், கொட்டைப் புளி விலை அதிகரித்துள்ளது.      ராயக்கோட்டையில் புளி நசுக்கும் தொழிலை, குடிசை தொழிலாக அங்குள்ள மக்கள் செய்து வருகின்றனர். இங்கிருந்து தயார் செய்யும் புளியை தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்காக புளியை பூ புளி, கிச்சிடிப்புளி, சப்பாத்தி புளி என வித, விதமாக தயார் செய்கின்றனர். இந்நிலையில் கர்நாடகா, மைசூர், ஆந்திரா மற்றும் ராஞ்சியில் இருந்து புளியை வாங்கி வந்து, சமைப்பதற்கு ஏற்றபடி பட்டை தட்டி, கொட்டை, நார் நீக்கி தயாரிக்கின்றனர். அதற்காக புளி கிலோ ₹20 வரை கூலியாக கொடுக்கின்றனர். இவ்வாறாக தயார்படுத்திய புளிக்கு, கடந்த 2 ஆண்டுகளாக விலையில்லாமல் ஏசி குடோன்களில் வைத்துள்ளனர்.  விலை அதிகரிக்கும் போது அதை விற்பனை செய்ய ஏசி குடோனிலிருந்து வெளியில் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், புதிய புளி விற்பனைக்கு வர ஆரம்பித்துள்ளது. கடந்த வாரங்களில் கிலோ ₹15 முதல் 20 வரை விற்றது. ஆனால் வரத்து குறைவால், நேற்று தரத்திற்கேற்ப கொட்டைப்புளி கிலோ ₹20 முதல் நல்ல கோபால் புளி ₹40 வரை விற்பனையானது. புளி விலை உயர்ந்ததால், விலையின்மையால் குடோனில் வைத்துள்ள புளியின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: