ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

உடுமலை:  உடுமலை ஜி.வி.ஜி  விசாலாட்சி மகளிர் கல்லூரியில் 71-வது விளையாட்டு தின விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோவை தேசிய மாணவர் படை கமாண்டிங்  அதிகாரி ஜெயண்ட் மோகன் ஜோஷி கலந்து கொண்டார். கல்லூரியின் செயலர் மதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலை வகித்தார். இயக்குனர் மற்றும் ஆலோசகர் மஞ்சுளா விழாவில் பங்கேற்றார். முதல்வர் ராஜேஸ்வரி  வரவேற்றார்.  விளையாட்டு தின ஆண்டறிக்கையை  விளையாட்டுத்துறை இயக்குனர் சுஜாதா வாசித்தார். கல்லூரி தேசிய மாணவர் படை கேப்டன் மற்றும் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் கற்பகவல்லி தேசிய மாணவர் படையின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை  வாசித்தார். கொடியேற்றத்துடன் துவங்கப்பட்ட விழாவில்  மாணவியரின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.  

மாணவியர் விளையாட்டு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். மாணவிகளுக்கு 3000 மீட்டர், 2000 மீட்டர், 800 மீட்டர், 200 மீட்டர் உள்ளிட்ட  தடகளப் போட்டிகள்  நடைபெற்றன. மேலும் சிலம்பாட்டம், மாறுவேடப் போட்டி, யோகா போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. பேராசிரியர்களுக்கும் பார்வையாளர்களுக்கும்,  ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளர்களுக்கும், குழந்தைகளுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.  போட்டிகளில் கலந்துகொண்டு  தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.   ஒட்டு மொத்த போட்டிகளுக்கான வெற்றி கோப்பையை நம்பிக்கை அணி தட்டிச் சென்றது. விளையாட்டுத் துறையின் மாணவச் செயலாளர் மேகா (மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல்)நன்றி கூறினார். விளையாட்டு  ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை இயக்குனர் சுஜாதா செய்திருந்தார்.

Related Stories: